GuidePedia

0


நீண்ட காலத்துக்கு பிறகு புத்தளம் நகரம் பெற்றுக்கொள்ள இருந்த பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இல்லாமல் ஆக்குவதற்கு இரவோடு இரவாக சதி செய்தவர்களுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து புத்தளம் பெரிய பள்ளிக்கு முன்பாக வெள்ளிக்கிழமை காலை (10) சத்தியாகிரகமும், ஆர்ப்பாட்டமும் இடம்பெற்றன.

வெண்ணெய் திரண்டு வரும் வேளை பானை உடைந்த கதையாகி போன புத்தளம் அரசியலின் இந்த திடீர் மாற்றத்தினால் புத்தளம் நகர மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள், புத்தளம் நகர சபையின் முன்னாள் தலைவரும், பொது வேட்பாளர் என எல்லோர் மனங்களையும் குளிர வைத்து சுவரொட்டிகளில் தென்பட்டவருமான கே.ஏ. பாயிஸின் ஆதரவாளர்கள், புத்தளம் மாவட்ட அரசியல் விழிப்புணர்வு மன்ற உறுப்பினர்கள், இளைஞர் அமைப்பினர் என பலரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

26 வருடங்கள் புத்தளம் நகரம் இழந்து நிற்கின்ற பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் புத்தளம் நகரின் அரசியல் அமைப்புகள், அரசியல் வாதிகள் பலர் இம்முறை பொது குழுவாக களம் இறங்குவதற்கு வியாழக்கிழமை இரவு முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மூத்த அரசியல் வாதியும், முன்னாள் வட மேல் மாகாண அமைச்சருமான எம்.எச்.எம். நவவி தான் சார்ந்த நீண்ட கால கட்சியான ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை தூக்கி எறிந்து விட்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்திருந்த நிலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை திடீரென அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து புத்தளம் மாவட்டத்தில் ஐ.தே.கட்சியில் இணைந்து தேர்தலில் குதித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாகவே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் முன்னாள் அமைச்சர் நவவிக்கு எதிராகவும் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.


Post a Comment

 
Top