GuidePedia

0
குறைக்க படவேண்டியது கல்வி கட்டணமா மெத்தனமா ” – சலீம் ஹாரிஸ்
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகளும் திறக்க ஆரம்பித்துவிட்டன. அதிகக் கட்டணம், அதற்குக் கண்டனம் என வழக்கமான காட்சிகளும் அரங்கேற ஆரம்பித்து விட்டன.
சென்னையில் ஒரு பிரபல தனியார் பள்ளியில் பெற்றோர்களும், மாணவர்களும் போராட்டம் நடத்தினர். அந்தப் பள்ளியில் அரசு நிர்ணயித்த கட்டணம் மட்டும் செலுத்தும் பிள்ளைகளுக்கு வெறும் ஆறரை மணி நேரப் படிப்பு மட்டுமே வழங்கப்படுமாம். மாறாக கூடுதல் கட்டணம் செலுத்தினால் கூடுதல் நேரம் படிப்பு, பேருந்து வசதி, ஸ்மார்ட் கிளாஸ், இன்னும் அதிக வசதிகளும் சலுகைகளும் வழங்கப்படுமாம். படிக்கும் பிள்ளைகளைப் பொருளாதார வேறுபாட்டில் பிளவுபடுத்துவதாகப் பள்ளியின் மீது பெற்றோர்கள் குற்றம் சுமத்துகின்றனர். நியாயமான குற்றச்சாட்டுதான்.
கல்விக் கட்டணம் தொடர்பான இத்தகைய போராட்டம் மேலும் சில பள்ளிகளிலும் நடைபெறத் தொடங்கியுள்ளன. தனியார் பள்ளிகளின் கட்டணத்தைத் தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும் என சென்ற வருடமும் அதற்கு முன்பும் மிகப் பெரிய போராட்டம் நடைபெற்றது. அரசும் இறுதியில் சில கட்டணக் கட்டுப்பாடுகளை விதித்தது. இது ஒருபுறம் இருக்க, கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் தனியார் பள்ளிகள் குறிப்பிட்ட சதவீத இருக்கைகளை ஏழை மாணவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் ஒதுக்க வேண்டும். இதற்கான கட்டணத்தை அரசே அந்த மாணவர்கள் சார்பாக பள்ளிகளுக்கு வழங்க வேண்டும்.
ஆனால், இன்னமும் பல ஆயிரங்கள் கொடுத்தும், லட்சங்கள் கொடுத்தும் எல்.கே.ஜி. வகுப்பில் சேர்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர். கல்வி பெறும் உரிமைச் சட்டமும் அநேக பள்ளிகளில் மறுக்கப்படுகிறது. இவை நியாயமான கோரிக்கைகளாகத் தெரிந்தாலும், முழுக்க முழுக்க மக்களின் அறியாமையும், அரசின் அலட்சியமும் மட்டுமே காரணம். அதிகக் கட்டணம் கட்டினால் தரமான கல்வி கிடைக்கும் என்பது மாயை. 100 சதவீதத் தேர்ச்சியைப் பெற பல தனியார் பள்ளிகள் என்னென்ன வழிகளைக் கையாளுகின்றனர் என்பதும் பலருக்குத் தெரியும். இன்ன பள்ளியில் படித்தால் கெüரவம் என்றும் பல பெற்றோர்கள் கருதுகின்றனர். இந்தப் பெருமை நடுத்தர வர்க்கத்தினர் பலரை கடுமையான வட்டிக்குப் பணம் பெற்று திண்டாடவும் வைக்கிறது. தனியார் பள்ளிகளின் கட்டணங்களைக் குறைக்கக் கூச்சலிடும் மக்கள் எத்தனை பேர் அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்தப் போராடி இருக்கின்றனர். அம்மா உணவகம் போல் அம்மா கல்விக் கூடங்கள் எப்போது என்று ஏன் கேட்பதில்லை. பல்வேறு விஷயங்களில் இலவசங்களை எதிர்பார்த்து எதிர்பார்த்துக் காத்திருக்கும் நமக்கு, நமது தெருவில் இருக்கும் அரசுப் பள்ளி கண்ணுக்குத் தெரிவதில்லை.
கடந்த சில ஆண்டுகளாக அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை குறைந்து கொண்டே வருவதாகக் கூறப்படுகிறது. இந்த ஆண்டில் அது இன்னமும் குறைய வாய்ப்புள்ளது. அரசுப் பள்ளிகள் என்பது கிராமத்தினருக்கும், வசதி குறைந்தவர்களுக்கும் மட்டுமே என்று ஆகிவிட்டது. அவர்களுக்கோ தங்களின் வாழ்வாதாரமே தினம் தினம் போராட்டம். தங்கள் பிள்ளைகள் படிப்பதே பெரிய நிம்மதியாக இருக்க, அரசுப் பள்ளிகளின் அவலங்களை கேட்கத் தோன்றுவதில்லை.
கற்பிப்பதைக் கடமையாக நினைத்து பணிபுரியும் ஆசிரியர்கள் சிலரும், கடமைக்காகப் பணிபுரியும் ஆசிரியர்கள் பலரும் நிறைந்து இருப்பதுதான் அரசு பள்ளிகள் என்ற நிலை உள்ளது. 2015-16ஆம் ஆண்டுக்கான தமிழக நிதி ஒதுக்கீட்டில் பள்ளிக் கல்விக்கும் உயர் கல்விக்கும் சில ஆயிரம் கோடிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் ஆசிரியர்கள் ஊதியம் ஒரு பெரும் பங்கு. ஆனால், அதற்கான பலன் எதிர்பார்க்கும் அளவுக்கு இல்லை. இவ்வளவு தொகை ஒதுக்கப்பட்டும், இந்தப் போட்டியான காலத்துக்கேற்ப கல்வி முறைகளோ, மாற்றங்களோ மேற்கொள்ளப்படவில்லை. திறமையான ஆற்றல் பெற்ற பல மாணவர்கள் அடையாளம் காணப்படாமலேயே போய்விடுகின்றனர். இவற்றுக்காக அரசிடம் கேட்பதும் நம் உரிமைதான்.
சில அரசுப் பள்ளிகள் நல்ல தரத்துடன் இயங்கத்தான் செய்கின்றன. ஆனால், பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில் அது சொற்பமே.

அரசுப் பள்ளிகளில் நல்ல கல்வி கிடைக்காது என்ற எண்ணம் பரவலாக இருப்பதால்தான், மக்களும் அதை நாடுவதில்லை, தனியார் பள்ளிகளும் லட்சக்கணக்கில் வசூல் செய்கின்றன. இந்தப் பிம்பத்தை மாற்ற வேண்டியது அரசின் கடமை.
அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு, கல்வி முறையில் பெரிய மாற்றங்கள் செய்ய வேண்டும். மாணவர்களைப்போல் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும் செயல்திறன் ஆய்வு (டங்ழ்ச்ர்ழ்ம்ஹய்ஸ்ரீங் தங்ஸ்ண்ங்ஜ்) செய்ய வேண்டும். இதை மக்கள் உணரும் வகையில் விழிப்புணர்வு செய்யப்பட வேண்டும். இல்லையேல் ஒவ்வொரு வருடமும் தனியார் பள்ளிகளுக்கு எதிராகப் போராட்டம் ஒருபக்கமும், பல்லாயிரக்கணக்கான ஏழை அரசுப் பள்ளி மாணவர்களின் திறமை பயன்படாமல் போவது மறுபக்கமும் நடந்து கொண்டேதான் இருக்கும்.

Post a Comment

 
Top