GuidePedia

0
மறுமை விளையாட்டல்ல


ஒருவர் செய்த நன்மைக்குரிய நற்கூலியை முழுமையாகக் கொடுப் பதற்கோ, ஒருவர் செய்த பாவங்களுக்குரிய தண்டனையை முழுமையாக அனுபவிப்பதற்கோ இந்த உலகம் போதுமானதல்ல. நற்கூலியையும் தண்டனையையும் முழுமையாக அளிப்பதற்கு வேறு ஓர் உலகம் வேண்டும் மறுமை வேண்டும் என்றுதான் மனித இயல்பு வேண்டுகிறது.

ஓர் ஆங்கில நாளிதழில் வெளியான உண்மை நிகழ்வைப் பார்ப்போம்.

தாய்லாந்து நாட்டில் பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் இருந்தார். தாய்லாந்துக்குள் நுழையும் வெளிநாட்டவரைப் பதிவு செய்யும் முக்கிய பணியில் அவள் நியமிக்கப்பட்டிருந்தாள். ஆனால் இலஞ்சம் பெற்றுக் கொண்டு பதிவு செய்யாமலேயே பலரை விட்டுவிடுவாள்.

இந்த மோசடி ஓராண்டல்ல, ஈராண்டல்ல பதினேழு ஆண்டுகள் தொடர்ந்தது. அதாவது பதினேழு ஆண்டுகள் அரசாங்கத்தை அவள் ஏமாற்றி வந்தாள். தவறான முறையில் பல ஆயிரம் டாலர்கள் சம்பாதித்தாள்.

இறுதியில் அவள் பிடிபட்டபோது நாட்டுக்கு எதிராக அவள் செய்த துரோகத்திற்காக 1000 ஆண்டு சிறைத்தண்டனையை நீதிமன்றம் அளித்தது.

இதைப் படித்ததும் சிரிப்பு வரலாம். ஆனால் மனித இயல்பின் உணர்ச்சிகளை நாம் இங்கே தெளிவாக உணரலாம். குற்றவாளி ஆயிரம் ஆண்டுகள் வாழப்போவதில்லை என்பது வெளிப்படை. அதற்கு முன்பே அவள் இறந்துவிடுவாள் என்பதும் நிச்சயம்.

அவ்வாறிருந்தும் நீதிமன்றம் ஏன் அவ்வளவு பெரிய தண்டனையை அளிக்கவேண்டும்? குற்றம் பெரிதாக இருக்கவே தண்டனையும் பெரிதாக இருக்கவேண்டும் என்று மனித இயல்பு விரும்புகிறது. ஆனால் இவ் வுலகில் செயல்முறையில் எத்தகைய நீதிமன்றத்தாலும் அந்த நீண்ட தண்டனையை முழுமையாக அளிக்க முடியாது. ஏனெனில் மனித வாழ்வு  மிகவும் குறுகியது.
தண்டனை காலமோ ஆயிரம் ஆண்டுகள்; வாழும் காலமோ ஐம்பது ஆண்டுகள். எனவே இவ்வுலகில் செயலுக்குரிய விளைவை அனுபவிப் பதற்கும் வாழ்க்கைக்கும் தொடர்பே இல்லை. இதைவிடப் பரந்துவிரிந்த ஓர் உலகம் வேண்டும்; அங்கே மனிதனுக்கு நீண்ட ஆயுள் அளிக்கப்பட வேண்டும்; அவனுடைய செயல்களுக்குரிய விளைவுகளை அவன் முழுமையாக அனுபவிக்கவேண்டும் என்றே நம் மனம் கூறுகிறது.

எனவே, மறுமை என்பது வெறும் விளையாட்டுப் பேச்சல்ல. மாறாக, மனித இயல்பு நாடுகின்ற இறைவனும் வலியுறுத்திக் கூறுகின்ற ஒரு நீதிமிக்க உலகம் அது. குர்ஆன் கூறுகிறது:

“”அன்று (மறுமை நாளில்) மக்கள் வெவ்வேறு நிலைமைகளில் திரும்புவார்கள், தங்களுடைய செயல்கள் தங்களுக்குக் காண்பிக்கப் படுவதற்காக. பிறகு, எவன் அணுவளவு நன்மை செய்திருந்தானோ அவன் அதனைக் கண்டுகொள்வான். மேலும், எவன் அணுவளவு தீமை புரிந்திருந்தானோ அவனும் அதனைக் கண்டுகொள்வான்.” (குர்ஆன் 99 : 68)

Post a Comment

 
Top