இது பயணித்தக் கட்டுரையல்ல; பயணிக்க வேண்டிய கட்டுரை!
அனுபவத்தைச் சொல்வதற்கல்ல;
அனுமானத்தை!
இந்தக் கட்டுரை நச்சரிக்கவல்ல; எச்சரிக்க!
இலக்குக் குறிக்கப்பட்ட முன்பதிவும் செய்யப்பட்ட பயணக் கட்டுரை!
பல்லக்கில் சுமக்கப்பட்ட
பாதுஷாக்களைப் போல்
நீயும் சுமக்கப்பட்டாலும்
அந்தப் பயண சுகம் அனுபவிக்க
உனக்கு உணர்விருக்காது!
நாலிரண்டு எட்டுக்கு மேல்
கால்க ளிருக்கும்
உன்னிரு கால்கள்
உதவா துனக்கு!
ஊர்வலத்தில்
நாயகனாக
நீ இருப்பாய் – இருந்தென்ன
நினை விருக்காது!
உனக்காக
ஒதுக்கப்பட்ட அறைதான் எனினும்
நீ அதில்
ஒடுங்கியே கிடப்பாய்!
இச்சையால் சேர்த்தவை
அனிச்சையாய் சேர்ந்தவை – ஏனைய
செய்வினைப் பொதிகள்
பத்திரமாய்ப் பயணிக்கும் உன்னோடு
இலக்கை எட்டியதும்
எல்லாம் சரிபார்க்கப்பட்டு
சுமைக்கேற்ற
கூலி கொடுக்கப்படுமுன்
கேள்வி கேட்கப்படுவாய்!
விடை தெரிந்த கேள்விகள்தாம்
இருப்பினும்
சொல்வதற்குள்
தொடை நடுங்கிப் போவாய்!
இம்மியளவேனும்
கூடவோ குறையவோ
விதிக்கப்பட மாட்டாய்!
விலக்கப்பட்டவற்றை நீ
எடுத்திருந்தாலோ
விளக்கப்பட்டவற்றை நீ
மறுத்திருந்தாலோ
விசாரணையின்போது
உன்
ஒவ்வொரு விடை மீதும்
அவ்வாறே எடை கூடும்!
எச்சரிக்கை,
இது
எந்தக் கொம்பனாலும்
ஒத்திப்போட்டுவிடவோ
ரத்து செய்துவிடவோ
முற்றிலும் இயலாத
விதிக்கப்பட்டுவிட்ட
பயணம்பற்றிய கட்டுரை!
இதை
வாசித்தப் பிறகேனும்
நேசிக்கக் கற்க வேண்டும்!
சக மனிதனோடு
விட்டுக் கொடுத்துப்
பிரயாணிக்கக் கற்க வேண்டும்!
இளையோரை
வழி நடத்துவதோடு
முதியோரின்
வலி நீக்கக் கற்க வேண்டும்!
படைத்தவனை வணங்குவதோடு
மறுப்பவனோடு பிணங்கவும்
ஏற்பவனோடு இணங்கவும்
கற்க வேண்டும்!
நலம் நிறைந்த – பாவ
கனம் குறைந்த
பயணப் பொதிகளோடு
எப்போதும் தயாராக இரு!
விரும்பியோரிடமிருந்து
விடை பெறவோ
திரும்பிவருவேன் என்று
கதை விடவோ
வாய்ப்புத் தரப்படாத
அந்தத் தருணம்
உன்னை அடையுமுன்
தன்னை எடைபோட்டு
தயாராகி விடு!
கனவுகளற்ற – கால
அளவுகளற்ற – அந்த
உறக்கத்திலிருந்து எழுப்பப்படும் நாள்
வெகு தூரத்தில் இல்லை!
Post a Comment