ஜாதிக ஹெல உறுமயவின் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க மற்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன ஆகியோர் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடவுள்ளதாக அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவின் மகனும் ஜனாதிபதியின் செயலாளர்களில் ஒருவருமான சட்டத்தரணி ரகித ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தனது முகநுால் பக்கத்தில் அவர் இதனைத் அறிவித்துள்ளார்.
இவரது தகவல்களின் படி அமைச்சர் ராஜித சேனாரத்ன களுத்தறை மாவட்டத்திலும், அமைச்சர் சம்பிக்க ரணவக்க கொழும்பு மாவட்டத்திலும் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடவுள்ளதாக அறியமுடிகின்றது.
இதேவேளை, புதிய முன்னணியொன்றின் கீழ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சுவார்த்தை நடாத்த முக்கிய அரசியல்வாதிகள் சிலர் தயாராகி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதில், அமைச்சர்களான ராஜித, சம்பிக்க, அர்ஜுன ஆகியோரும் இடம்பெற்றுள்ளதாகவும் ஏற்கனவே அரசியல் வட்டாங்கள் அறிவித்திருந்தன. அத்துடன், இவர்களுடன் இடதுசாரிக் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் என்பனவும் இணைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டன.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வேட்பாளராக வருவதற்கு அனுமதி வழங்கியமையே தாங்கள் இவ்வாறு தீர்மானம் எடுப்பதற்குக் காரணம் எனவும் அக்குழுவின் உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.
ஜனாதிபதியைச் சந்திக்க முன்னர் தாம் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்ததாகவும் அக்குழுவின் சார்பில் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டிருந்ததாகவும் அரசியல் வட்டாரங்கள் ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment