GuidePedia

0


கொழும்பு துறைமுக நகர திட்டத்தினால் ஏற்படும் சூழல் பிரச்சினை தொடர்பான மதிப்பீட்டு அறிக்கை கிடைக்கப்பெற்றவுடன், கொழும்பு துறைமுக நகர திட்டத்தை மீள ஆரம்பிப்பது தொடர்பில் அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் ராஜித்த சேனாரத்தன தெரிவித்துள்ளார். 



தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற வாராந்த அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்டு அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இதன் போது எடுக்கப்பட்ட தீர்மானங்கள் வருமாறு,

01. 2015 ஆம் நிதியாண்டிற்கான நிதிச்சேவை ஆணைக்குழுவின் சிபார்சுகள் 

முன்வைக்கப்பட்ட நிதிச்சேவை ஆணைக்குழுவின் 2015 ஆம் நிதியாண்டிற்கான சிபார்சுகளை செயற் படுத்துவதற்கும், குறித்த சிபார்சுகளை செயற்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அரசியல் யாப்பின் படி அதன் சிபார்சுகளை பாராளுமன்றத்திற்கு முன்வைப்பது தொடர்பிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

02. விவாக பதிவுச்சட்டத்தில் திருத்தம் செய்தல் 

வரவு செலவு திட்டத்தில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு இணங்க விவாக பதிவு செய்வதற்கான அறவிடப்படும் 5000 ரூபா தொகையினை 1000 ரூபாவாக குறைப்பதற்கான திருத்தம் 2015.03.16 ஆம் திகதி முதல் நடைமுறைப் படுத்தப்படுகின்றன. இந்த நடவடிக்கைகளுக்காக வேண்டி விவாக பதிவுச்சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் நோக்கில் உள்நாட்டு அலுவலல்கள் அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேராவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

03. 2003 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்க தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் அமைச்சுக்கள் உள்ளடங்கிய குழு ஒன்றை நியமித்தல் 

தகவல் தொழில்நுட்ப துறையில் முன்னிலையில் வகிக்கும் நாடு என்ற ரீதியில் இந்த நிலையை மேலும் நிலை நிறுத்திக் கொள்ளவும் குறித்த துறையில் முதலீடுகளை மேற் கொள்ள ஏற்புடைய சூழலை ஏற்படுத்திக் கொள்ளவும் அரசாங்கத்தின் உயர் நிறுவனங்களின் தொடர்புகளை பலப்படுத்திக் கொள்ளவும் மேற்கூறப்பட்ட சட்டத்தின் 3ஆம் பிரிவின் கீழ் தற்போது நியமிக்கப்பட்டு இருக்கும் அமைச்சுக்களின் குழுவினை மேலும் விடய தெளிவுள்ள அமைச்சர்கள் மற்றும் குறித்த துறையில் பாண்டித்தியம் பெற்றவர்கள் ஆகியோர்களை உள்ளடக்கி அதனை மேலும் விஸ்தரிக்கும் நோக்கில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

04. 2015 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் அரசாங்கம் பெற்றுக் கொண்ட கடன் தொடர்பான விபரங்கள் 

குறித்த விடயம் தொடர்பில் நிதியமைச்சர் கௌரவ வரி கருணாநாயக்கவினால் அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்ட தகவல்கள் தொடர்பில் அமைச்சரவையின் கவனம் செலுத்தப்பட்டது. 

2015 ஆம் ஆண்டிற்காக அங்கீகரிக்கப்பட்ட முழு கடன் வரையறை 1,780,000 மில்லியன் ஆகும். 2015-04-30 திகதி வரை பெற்றுக் கொண்ட கடன் தொகை விபரம் 

முழு உள்நாட்டு கடன் 526,204.05
முழு வெளிநாட்டு கடன் 158,049.36
பெறப்பட்ட மொத்த முழுக்கடன் 684,253.41

05. 2015 ஆம் ஆண்டிற்கான அரசாங்கத்தின் நெல் கொள்வனவு செய்யும் வேலைத்திட்டம்

இதுவரை 160,301.8 மெட்ரிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. இதுவே இக்காலப்பகுதியில் ஒரு போகத்தில் கொள்வனவு செய்யப்பட்ட அதிக தொகையாகும். அடுத்த போகத்தின் நெல்லினை கொள்வனவு செய்வதற்காக வேண்டி தற்போது களஞ்சியசாலைகளில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள நெல்லினை டென்டர் அடிப்படையில் விற்பனை செய்வதற்கும், பெரும்போக நெற் செய்கையின் அறுவடையினை பலனுள்ள முறையில் கொள்வனவு செய்வதற்கும் உணவு பாதுகாப்பு அமைச்சர் கௌரவ காமினி ஜயவிக்ரம பெரேராவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

06. பல்வேறுபட்ட நகர அபிவிருத்தி வேலைத் திட்டங்களுக்காக வேண்டி தேவையான இடங்களை பெற்றுக் கொள்ளும் போது இடம்பெயர்ந்த குடும்பங்களுக்காக பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ள இடங்களை அதில் வசிப்போருக்கு விற்றல்

நகர அபிவிருத்தி அதிகார சபையினால் 1980 - 1990 காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக வேண்டி பெற்றுக் கொள்ளப்பட்ட இடங்களில் வசித்து வந்த மத்திய தர வர்க்கத்தினருக்காக வேண்டி வேறு இடங்கள் அல்லது வீடுகள் மாதாந்த கட்டுப்பணம் செலுத்தும் வகையில் வழங்கப்பட்டிருந்தது. குறித்த இடங்களில் வசித்து வரும் மக்களின் வேண்டுகோளின் பிரகாரம், அவர்களுக்கு இடங்களை பெற்றுக் கொடுக்கும் போது காணப்பட்ட குறித்த நிலத்தின் பெறுமதியின் அடிப்படையில் இரத்தினபுரி, பெலியகொட, பத்தரமுல்லை, இரத்மலானை மற்றும் மாதிவெல ஆகிய வீட்டுத் தொகுதியில் குறித்த இடங்களில் வசிக்கும் மக்களுக்கு குறித்த இடங்களின் உரித்தினை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் ரவூப் ஹக்கீமினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

07. கொழும்பு துறைமுகத்தில் இருந்து கொலன்னாவ மொத்த களஞ்சியசாலை வரை எண்ணெய் குழாய்களை அமைக்கும் வேலைத்திட்டம்

சுமார் 40 தொடக்கம் 70 வருடங்கள் பழைவாய்ந்த குறித்த எண்ணெய் குழாய்களுக்கு பகரமாக கொழும்பு துறைமுகத்திலிருந்து கொலொன்னாவ எண்ணெய் களஞ்சியசாலை வரையான எண்ணெய் கொண்டு செல்ல பயண்படுத்தப்படும் குழாய் தொகுதியொன்றினை அமைப்பதற்கு தேவையான அடிப்படை வசதிகள் தொடர்பில் பூரண அறிக்கை ஒன்றை சமர்ப்பிப்பதற்கு இலங்கை பெற்றோலிய மொத்த களஞ்சியசாலை கம்பனிக்கு வழங்குவதற்கும், குறித்த அறிக்கையின் பெயரில் குறித்த வேலைத்திட்டத்திற்காக பொருத்தமான ஒப்பந்தக்காரர் ஒருவரை தெரிவு செய்து கொள்ளும் நோக்கில் திறந்த விலைமனுக்களை கோருவதற்கும் மின் சக்தி மற்றும் எரி சக்தி அமைச்சர் பாடலி சம்பிக்க ரணவக்கவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

08. தேசிய எரிசக்தி பாதுகாப்பு மற்றும் வினைத்திறன் பயன்பாடு தொடர்பான வேலைத்திட்டம் - அரச நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டிய எரிசக்தி பாதுகாப்பு நடைமுறைகள்

மின் சக்தி உற்பத்தி தொடர்பில் அவசியமான பெற்றோலிய எண்ணெய் வளத்தை இந்நாட்டிற்கு இறக்குமதி செய்ய தேசிய ஏற்றுமதி வருமானத்தில் சாதாரணமாக ஒவ்வொரு வருடத்திலும் சுமார் 30 சத வீதம் செலவளிக்க வேண்டிய நிலை ஏற்படும். அதன் அடிப்படையில் தெசிய மின் சக்தி பாதுகாப்பு மற்றும் வினைத்திறனான பாவனை தொடர்பில் தேசிய வேலைத்திட்டத்தின் முதற் கட்டமாக அரச நிறுவனங்களில் மின் சக்தி பாதுகாப்பு மற்றும் வினைத்திறனான பாவனை தொடர்பிலும், அரச அலுவலகங்களில் ஊழியர் குழுக்களை இவ்வேலைத்திட்டத்தில் இணைப்பதற்கும் மின்வலு சக்தி அமைச்சர் பாடலி சம்பிக்க ரணவக்கவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

09. தேசிய விளையாட்டு விழா - 2016 

41 ஆவது தேசிய விளையாட்டு விழாவிற்காக ஏற்கனவே ஏற்பாடுகள் மேற் கொள்ளப்படுவதுடன், ஒரு சில போட்டி நிகழ்ச்சிகள் ஏற்கனவே முடிவடைந்துள்ளது. 2016 ஆம் ஆண்டிற்கான தேசிய விளையாட்டு விழாவினை வட மாகாணத்தின் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் நடாத்த ஏற்பாடுகளை மேற்கொள்ள சிரேஸ்ட அதிகாரிகளை கொண்ட குழுவொன்றை நியமிக்க சுற்றுலா மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

10. புலமைச் சொத்துக்களுடன் தொடர்புடைய வர்த்தகம் மீதான உலக வர்த்தக நிறுவன உடன்படிக்கையினை திருத்தவதற்கான மரபுச் சீர்முறையினை ஏற்றுக் கொள்ளுதல்

மருந்தாக்கல் துறையில் மட்டுப்படுத்தப்பட்ட தயாரிப்பு ஆற்றலினைக் கொண்டுள்ள நாடு என்ற ரீதியில் இலங்கையானது, கொள்ளை நோய் அல்லது இயற்கைப் பேரிடர்கள் போன்ற ஏதேனும் மருத்துவ அவசர நிலைமைகளின் போது உலகம் பூராகவுமுள்ள போட்டி வழங்குனர்கள் எவரிடமிருந்தும் ஆக்கவுரிமையினைக் கொண்டுள்ள விலை உயர்ந்த மருத்துவப் பொருட்களின் பொதுவான வடிவத்தினை அனுமதிக்கும் மேற்படி நெகிழ்வுத் தன்மைகளிலிருந்தான பயன்களைப் பெறுகின்றது. சில சந்தர்ப்பங்களில் மேற்படி நெகிழ்வுகளை பயன்படுத்துவதற்கு அனைத்து னலக வர்த்தக நிறுவன உறுப்பினர்களின் உரிமைகளை அங்கீகரிக்கின்றமைக்கு மரபுச் சீர்முறையின் உறுதிப்படுத்தல் அவசியமாவதால் குறித்த விடயம் தொடர்பில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிசாட் பதியுதீனினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

11. வெஸ்கோ மற்றும் கொஸ்கோ ஆகிய நிறுவனங்களின் ஊழியர்களின் பிரச்சினைகளை தீர்த்தல்

குறித்த நிறுவனங்களில் பணிபுரியும் நிரந்தரமற்ற ஊழியர்களை நிரந்தரமாக்குவதற்கும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய வரப்பிரசாதங்களை வழங்குவதற்கும் உள்ளக போக்குவரத்து அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

12. ஒரு லீட்டர் திரவ பாலுக்கான கொள்வனவு விலையை 60 ரூபாயில் இருந்து 70 ரூபாயாக அதிகரித்தல்

2015 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்திற்கு ஏற்ப ஒரு லீட்டர் திரவ பாலுக்கான கொள்வனவு விலையை 60 ரூபாயில் இருந்து 70 ரூபாயாக அதிகரிப்பதற்கு முன்மொழியப்பட்டது. அதிகளவானோர்களின் அங்கீகாரத்துக்கு இணங்க தயாரிக்கப்பட்ட விலை சூத்திரத்தினை செயற்படுத்த சமூக சேவைகள், நலன்புரி மற்றும் கால்நடை வள அபிவிருத்தி அமைச்சர் பி. ஹரிசனினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

13. 70 வயதினைத் தாண்டிய முதியோர்களுக்காக ரூபா 2000 கொடுப்பனவினை வழங்குவதற்கு ஒதுக்கீட்டினைச் செய்து கொள்ளல் 

70 வயதை தாண்டிய 386,080 முதியோர்களுக்காக வேண்டி மாதாந்தம் 2000 ரூபா வீதம் வழங்குவதற்கு தேவையான நிதியினை ஒதுக்கிக் கொள்வதற்காக சமூக சேவைகள், நலன்புரி மற்றும் கால்நடை வள அபிவிருத்தி அமைச்சர் பி. ஹரிசனினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

14. விஞ்ஞானிகளை பறிமாறிக் கொள்ளுதல் மற்றும் ஒன்றிணைந்த உயிரியல் தொழில்நுட்ப ஆய்வு கூடம் ஒன்றை அமைப்பதற்கும் தேவையான ஒத்துழைப்புகளை ஏற்படுத்திக் கொள்ளுதல் தொடர்பான கூட்டு ஒப்பந்தம்

மேற் குறிப்பிட்ட இரு ஒப்பந்தங்களை மேற் கொள்வது தொடர்பில் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் கௌரவ கலாநிதி சரத் அமுனுகம அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

15. உள்ளுராட்சி நிறுவனங்களின் உறுப்பினர்களுக்காக ஒழுக்கக் கோவையினை அறிமுகப்படுத்தல்

உள்ளுராட்சி நிறுவனங்களின் உறுப்பினர்களுக்காக ஒழுக்கக் கோவையொன்றினை அறிமுகம் செய்வதற்கும் அதனை செயற்படுத்துவதற்கும் மாகாண சபைகளுக்கு குறித்த கோவையினை அனுப்பி வைத்து அதன்படி அவற்றின் கருத்துக்களைப் பெற்றுக் கொள்வதற்கும் அரசாங்க நிர்வாக, உள்ளுராட்சி மற்றும் ஜனநாயக ஆட்சி அமைச்சர் கரு ஜயசூரிய, மாகாண சபைகள் மற்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் ஆகியோர் இணைந்து முன்வைத்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

16. நிதி ஆணைக்குழுவிற்கான புதிய அலுவலகக் கட்டிடமொன்றை நிர்மாணித்தல்

நிதி ஆணைக்குழுவிற்கான புதிய அலுவலகக் கட்டிடமொன்றை நிர்மாணிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

17. வீரஹெட்டியாவில் ஜோர்ஜ் ராஜபக்ச விளையாட்டு திடலில் காட்சி மாடத்தினை நிர்மாணித்தல் 

வீரஹெட்டியாவில் ஜோர்ஜ் ராஜபக்ச விளையாட்டு திடலில் காட்சி மாடத்தினை நிர்மாணிப்பதற்கு நகர அபிவிருத்தி, நிர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீமினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

18. ஹொரன பஸ் நிலைய அபிவிருத்தி வேலைத்திட்டம் கட்டம் 11 ஐ செயற்படுத்தல்

குறித்த வேலைத்திட்டம் தொடர்பில் ஒப்பந்தம் ஒன்றை மேற் கொள்வதற்காக நிர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீமினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

19. KFAED நிதியத்தின் மூலம் நிர்மாணிக்கப்பட உள்ள 25 பாலங்களின் மீள் கட்டுமாண பணிகளுக்காக ஆலோசனை சேவையினை பெற்றுக் கொள்ளல் 

KFAED நிதியத்தின் மூலம் நிர்மாணிக்கப்பட உள்ள 25 பாலங்களின் மீள் கட்டுமாண பணிகளுக்காக ஆலோசனை சேவையினை பெற்றுக் கொள்வதற்காக வேண்டி முன்வைக்கப்பட்ட பறிந்துரைகளின் படி பெருந்தெருக்கள் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் கபீர் ஹாசீமினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

20. சீன அபிவிருத்தி வங்கியினால் நிதியளிக்கப்படும் முன்னுரிமை விதிகள் கருத்திட்டம் 3 பிரிவு 11 

குறித்த கருத்திட்டத்தின் கீழ் மிகுதியாகப் காணப்படும் தொகையில் இதுவரையில் வேலைகள் ஆரம்பிக்கப்படாத 8 வீதிகளுக்கும் பதிலாக உடனடியாக புனரமைப்பு தேவைப்படுகின்ற புதிய வீதிகளை மாற்றீடு செய்வதற்கு நெடுஞ்சாலைகள் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் கபீர் ஹாசீமினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

21. இலங்கை துறைமுக அதிகார சபையின் கிழக்கு கொள்கலன் முனையத்திற்கு கொள்கலன்களைக் கையாளும் பாரம்தூக்கிகளைப் பெற்றுக் கொள்ளல்

இலங்கை துறைமுக அதிகார சபையின் கிழக்கு கொள்கலன் முனையத்திற்கு கொள்கலன்களைக் கையாளும் பாரம்தூக்கிகளைப் பெற்றுக் கொள்வதற்காக வேண்டி தகைமைகளைப் பெற்றுள்ள தரப்பினரிடமிருந்து விலை மனுக்களை பெற்றுக் கொள்ளும் நோக்கில் துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

22. இலங்கை புகையிரத சேவையில் புகையிரத ஓட்டத்தினை சீர் செய்தல் 

2015 -2020 தேசிய புகையிரத மூலோபாய வழிமுறை சட்டகத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதன் பிரகாரம் 02 என்ஜின் பெட்டிகள் மற்றும் 12 பயணிகள் பெட்டிகளுடன் கூடிய 06 பவர் செட்கள், 01 என்ஜின் பெட்டி, 01 டம்மி பெட்டி மற்றும் 06 பயணிகள் பெட்டிகளுடன் கூடிய 12 பவர் செட்டுகள், 160 பயணிகள் பெட்டிகள், 65 தொன் கொள்ளளவைக் கொண்ட எரிபொருள் போக்குவரத்து வண்டிகள் 30 கொள்வனவு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உள்ளகப் போக்குவரத்து அமைச்சர் ஆர்.எம்.ரஞ்சித் மத்தும பண்டாரவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

23. இராணுவ வீரர்களுக்கான விசேட சலுகை அட்டை ஒன்றை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சித் திட்டம் 

உயிர் இழந்த அங்கவீனமுற்ற படைவீரர்களையும் அவர்களின் குடும்ப அங்கத்தவர்களையும் அறிந்து கொள்ளல், சலுகைகளை பெற்றுக் கொடுப்பதற்கு இராணுவ விசேட அட்டை ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கு பாதுகாப்பு அமைச்சர் எனும் ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

24. நானாவித சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை பாராளுமன்றத்தின் அங்கீகாரத்துக்காக சமர்ப்பித்தல்

இறக்குமதி வரித் திருத்தங்களுக்கு இணங்கியதாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்களை மேற் கூறப்பட்ட சட்ட திட்டங்களின் சட்ட ரீதியான ஏற்பாடுகளுக்கு இணங்கியதாக பாராளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

25. ஆசிய உட்கட்டமைப்பு வசதிகள் முதலீட்டு வங்கியை தாபிப்பதற்கான இணக்கப்பாடு பற்றிய உடன்படிக்கை

ஆசிய உட்கட்டமைப்பு வசதிகள் முதலீட்டு வங்கியை தாபிப்பதற்கான இணக்கப்பாடு பற்றிய உடன்படிக்கையில் கைச்சாதிடும் வைபவம் 2015 ஜுன் மாதம் 29 ஆம் திகதி சீனாவில் இடம்பெறவுள்ளது. குறித்த வைபவத்தில் இலங்கை சார்பில் கைச்சாத்திடுவதற்கு அனுமதியை வேண்டி நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

26. கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி வேலைத்திட்டம் 

குறித்த வேலைத்திட்டம் தொடர்பில் மேலதிக நடவடிக்கைகளை மேற் கொள்வதற்காக வேண்டி நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் ஒப்படைப்பதற்கும், குறித்த நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் சூழலியல் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து மேலதிக நடவடிக்கைகளை மேற் கொள்வதற்கு மத்திய சூழலியல் அதிகார சபைக்கு ஆலோசனை வழங்குவதற்கும், குறித்த அறிக்கை கிடைக்கப் பெற்றவுடன் வேலைத்திட்டத்தின் பணிகளை ஆரம்பிப்பதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

27. (Corporate Social Responsibility – CSR) நிதியினை அரச நிறுவனங்களின் தேவைகளுக்காக பயன்படுத்தல்

மேற்படி திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்காக வேண்டி குழுவொன்றை நியமிப்பதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

28. கோல்டன் கீ கிறடிட் கார்ட் கம்பனி லிமிடெட்டின் பிணைய வைப்பு உடைமையாளர்களுக்கான உத்தேச மீள்கொடுப்பளவு பொறிமுறை

கோல்டன் கீ கிறடிட் கார்ட் கம்பனி லிமிடெட்டின் பிணைய வைப்பு உடைமையாளர்களுக்கான உத்தேச மீள்கொடுப்பளவு பொறிமுறை ஒன்றினை அறிமுகம் செய்வதற்கு கொள்கை திட்டமிடல், பொருளாதார விவகாரம், சிறுவர், இளைஞர் மற்றும் கலாசார விவகார அமைச்சர் ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

Post a Comment

 
Top