GuidePedia

0
Image result for நரகம்

அல்லாஹ் கூறுகிறான்: நரகத்தைப் பயந்து கொள்ளுங்கள் அதன் எரிபொருள் மனிதர்களும் கற்களுமாகும். அது காஃபிர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ளது. (2:24)
நபி(ஸல்) அவர்கள் தம் தோழர்களிடம் கூறினார்கள்: நீங்கள் எரிக்கும் நெருப்பு நரகின் நெருப்பில் எழுபது மடங்குகளில் ஒன்றாகும். அப்போது அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! (பாவிகளைத் தண்டிப்பதற்கு) இதுவே போதுமெனக் கூறினார்கள்.
அதற்கு நபி(ஸல்) அவர்கள் நிச்சயமாக இதில் அறுபத்தொன்பது மடங்குகள் அதிகமாக்கப்படும். அவையனைத்தும் இது போன்ற வெப்பமுள்ளதாக இருக்கும். எனக் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
நரகம் ஏழு அடுக்குகளைக் கொண்டதாகும். அதில் ஒவ்வொரு அடுக்கும் மற்றதைவிட மிகக் கடுமையான வேதனை உள்ளதாகும். அதில் ஒவ்வொரு அடுக்கிலும் அதற்குத் தகுதியானவர்கள் தத்தமது செயல்களைப் பொறுத்து இருப்பார்கள். நயவஞ்சகர்கள் நரகத்தின் அடித்தட்டிலிருப்பார்கள். அதுதான் மிகக் கடுமையான வேதனைக்குரியதாகும். காஃபிர்களுக்கு நரகத்தில் வேதனை இடைவிடாத நிரந்தர வேதனையாகும். அவர்கள் நரகில் கரிந்துவிடும் போதெல்லாம் வேதனையை அதிகப்படுத்துவதற்காக திரும்பவும் பழைய நிலைக்குக் கொண்டு வரப்படுவார்கள்.
அல்லாஹ் கூறுகிறான்: அவர்களின் தோல்கள் கரிந்திடும் போதெல்லாம் அவர்கள் வேதனை அனுபவிப்பதற்காக வேறு தோல்களை நாம் ஏற்படுத்துவோம்.(4:56) எவர்கள் நிராகரித்தார்களோ அவர்களுக்கு நரக நெருப்புத்தானிருக்கிறது. அவர்கள் மரணம் அடையும் வகையில் அவர்களுடைய கதை முடிக்கப்படவும் மாட்டாது. நரகத்திலுள்ள வேதனை அவர்களுக்கு இலேசாக்கப்படவும் மாட்டாது. இவ்வாறே நாம் எல்லா காஃபிர்களுக்கும் கூலி வழங்குவோம்.(35:36)
அதில் அவர்கள் விலங்கிடப்படுவார்கள். அவர்களின் கழுத்துக்களிலும் விலங்கிடப்படும் அல்லாஹ் சொல்கிறான்: இன்னும் அந்நாளில் குற்றவாளிகளைச் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டவர்களாக அவர்களுடைய ஆடைகள் தாரால் (கீல் எண்ணையினால்) ஆகி இருக்கும்; இன்னும் அவர்களுடைய முகங்களை நெருப்பு மூடி இருக்கும்.(14:49-50)
நரகவாசிகளின் உணவு ஸக்கூம் என்ற கள்ளி மரமாகும். அல்லாஹ் கூறுகிறான்: நிச்சயமாக ஸக்கூம்(கள்ளி) மரம் பாவிகளின் உணவாகும். அது உருக்கப்பட்ட செம்பு போன்றிருக்கும். அது வெந்நீர் கொதிப்பதைப் போன்று வயிற்றில் கொதிக்கும்.(44:41-46)
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஸக்கூம் மரத்திலிருந்து ஒரு சொட்டு உலகில் விழுந்து விட்டால் உலகிலுள்ளவரின் வாழ்க்கை வீணாகிவிடும். அப்படியானால் அதுவே உணவாக கொடுக்கப்படுபவர்களின் நிலை எப்படி இருக்கும்? (திர்மிதி) நரக வேதனையின் கடுமையையும் சுவர்க்க பாக்கியத்தின் பெருமையையும் பின் வரும் ஹதீஸ் விளக்கிக் காட்டுகிறது: மறுமையில் உலகில் மிகுந்த வசதி வாய்ப்புடன் வாழ்ந்த காஃபிர்களில் ஒருவன் கொண்டு வரப்படுவான். அவனை நரக நெருப்பில் ஒரு முறை முக்கப்படும். பின்னர் அவனிடம் உனக்கு(உலகில்) ஏதேனும் வசதி இருந்ததா? எனக் கேட்கப்படும். அப்போது அவன் எந்தப் பாக்கியமும் எனக்கிருந்ததில்லையே எனக் கூறுவான். ஒரு முறை நரகத்தில் முக்கியதால் உலக பாக்கியங்கள் அனைத்தையும் அவன் மறந்து விடுகிறான். இவ்வாறே உலகில் மிகப்பெரும் கஷ்டத்தில் வாழ்ந்த ஒரு முஃமின் கொண்டு வரப்பட்டு ஒரு முறை சுவர்க்கத்தில் புகுத்தப்படுவான். பின்னர் (உலகத்தில்) ஏதேனும் உனக்கு கஷ்டமிருந்ததா? எனக் கேட்கப்படுவான். அதற்கவன் எந்தக் கஷ்டமும் வருமையும் எனக்கிருந்ததில்லையே எனக் கூறுவான். சுவர்க்கத்தில் ஒரு முறை புகுத்தப்பட்டதால் உலகில் அவன் அனுபவித்த கஷ்டம் வறுமை தூப்பாக்கியம் அனைத்தையும் அவன் மறந்துவிடுவான். (முஸ்லிம்)

Post a Comment

 
Top