GuidePedia

0
Post image for இறுதி நாளும் அதன் அடையாளங்களும்!
1- அல்லாஹ் இவ்வுலகத்தை நிரந்தரமாக இருப்பதற்காக படைக்கவில்லை. மாறாக அதற்கென முடிவு நாள் வரும். அந்நாளே இறுதி நாளாகும். அதுவே ஐயத்திற்கிடமில்லாத உண்மையுமாகும். அல்லாஹ் சொல்கிறான்:
நிச்சயமாக இறுதிநாள் வந்தே தீரும் அதில் சந்தேகமில்லை.(40:59) நிராகரிப்பாளர்கள் இறுதி நாள் எங்களிடம் வருமா? எனக் கேட்கிறார் கள்(நபியே) நீர் கூறும்: ஆம்! எம் இறைவனின் மீது சத்தியமாக நிச்சயமாக அது உங்களிடம் வரும்.(34:3)
(விசாரணைக்குரிய) காலம் நிச்சயமாக வந்தே தீரும்; அதில் சந்தேகமே இல்லை – எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் இதில் நம்பிக்கை கொள்ளவில்லை. (54:1)

மனிதர்களுக்கு அவர்களுடைய கணக்கு (விசாரணை நாள்) நெருங்கிவிட்டது. ஆனால் அவர்களோ அதைப் புறக்கணித்து பராமுகமாக இருக்கிறார்கள்.(21:1)

எனினும் அது நெருக்கமாக இருக்கிறதென்பது மனித அறிவால் அறிந்து கொள்ளக்கூடிய விஷயமல்ல. அதை அவர்கள் அறிந்து கொள்ளவும் முடியாது. எனினும் அல்லாஹ்வின் விசாலமான அறிவையும் உலகத்தில் கடந்துவிட்ட கால அளவையும் கவனிக்கும்போது மறுமைநாள் சமீபமானது என அறியலாம். மறுமை பற்றிய அறிவு அல்லாஹ் தனக்கே சொந்தமாக்கிக் கொண்ட மறைவான விஷயங்களிலுள்ளதாகும். அவன் இவ்விஷயத்தைத் தனது படைப்புகளில் எவருக்கும் அறிவித்துக் கொடுக்கவில்லை. அல்லாஹ் கூறுகிறான்:

மக்கள் உம்மிடம் மறுமை நாள் பற்றிக் கேட்கிறார்கள். நிச்சயமாக அது பற்றிய அறிவு அல்லாஹ்விடமே இருக்கிறதென நீர் கூறுவீராக! அதை நீர் அறிவீரா? அது சமீபமாக வந்துவிடலாம். (33:63)

நபி(ஸல்) அவர்கள் இறுதி நாள் நெருங்கிவிட்டது என்பதை அறிவிக்கக்கூடிய அடையாளங்களைக் கூறியுள்ளார்கள். அவை: தஜ்ஜால் வருவது இது மக்களுக்கு மிகப் பெரும் குழப்பமாக அமையும். மக்களில் அதிகமானோர் ஏமாந்து போகுமளவிற்கு சில அற்புதங்களைச் செய்து காட்டுவதற்கு அல்லாஹ் அவனுக்கு சக்தி வழங்குவான். அதாவது வானத்திற்கு உத்தரவு போடுவான். அது மழை பொழியும். புற்பூண்டுகளை முளைவிக்கும்படி பூமிக்கு ஆணையிடுவான். அது அவற்றை முளைவிக்கும். இறந்தவனை உயிர்ப்பிப்பான். இன்னும் இதுபோன்ற அற்புதங்களைச் செய்வான்.

அவனைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அவன் ஒற்றைக் கண்ணன். சுவர்க்கம் நரகம் போன்றதைக் கொண்டு வருவான். அவன் எதை சுவர்க்கம் என்று கூறுவானோ அது நரகமாகும். அவன் எதை நரகமென்று கூறுவானோ அது சுவர்க்கமாகும். அவன் பூமியில் நாற்பது நாட்கள் இருப்பான். அதில் ஒரு நாள் ஒரு வருடம் போன்றும் ஒரு நாள் ஒரு மாதம்;; போன்றும் ஒரு நாள் ஒரு வாரம் போன்றும் ஏனைய நாட்கள் சாதரண நாட்கள் போன்றுமிருக்கும். பூமியில் மக்கா மதீனா வைத்தவிர அவன் நுழையாத இடங்களே இருக்காது.

மேலும் அதன் அடையாளங்களில் இதுவும் ஒன்றாகும். அதாவது சுபுஹுத் தொழுகை நேரத்தில் டமாஸ்கஸின் கிழக்குப் பகுதியிலுள்ள வெள்ளை மனாராவிலிருந்து ஈஸா(அலை) அவர்கள் இறங்கி வருவார்கள். அவர்கள் சுபுஹுத் தொழுகையை மக்களுடன் தொழுவார்கள். அதன் பின் தஜ்ஜாலை தேடிச் சென்று கொன்று விடுவார்கள். சூரியன் மேற்கில் உதிப்பதும் இறுதி நாளின் அடையாளமாகும். அதை மக்கள் காணும்போது நடுங்கி ஈமான் கொள்வார்கள். எனினும் அவர்களின் ஈமான் அவர்களுக்குப் பலனளிக்காது. இறுதி நாளுக்கு மேலும் பல அத்தாட்சிகளுள்ளன.
2- இறுதி நாள் பாவிகளின் மீதே ஏற்படும். அதாவது இறுதி நாள் ஏற்படும் முன் முஃமின்களின் உயிர்களைக் கைப்பற்றக்கூடிய தூய்மையான காற்றை அல்லாஹ் அனுப்பிவைப்பான். அதன் பின்னர் அல்லாஹ் எல்லா படைப்பினங்களையும் மரணிக்கச் செய்து இவ்வுலகத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டுமென்று நாடினால் சூர் ஊதும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட மலக்கிடம் அதில் ஊதும்படி ஏவுவான்.(சூர் என்பது ஒரு பெரும் கொம்பாகும்) மக்கள் அந்த சப்தத்தைக் கேட்டவுடன் மயங்கிவிடுவார்கள். அல்லாஹ் கூறுகிறான்:
சூர் ஊதப்படும். அப்போது அல்லாஹ் நாடியவர்களைத் தவிர வானம் பூமியிலுள்ள அனைவரும் மயங்கிவிடுவார்கள்.(39:68) இது வெள்ளிக்கிழமை ஏற்படும். அதன் பின்னர் அனைவரும் மரணித்துவிடுவார்கள். அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் இருக்க மாட்டார்கள்.
3- மனிதனின் உடலனைத்தும் அழிந்துவிடும். மனிதனின் முதுகந்தண்டின் கடைசியிலுள்ள ஒரு சிறு எலும்பைத் தவிர வேறு எல்லாவற்றையும் பூமி தின்றுவிடும். எனினும் நபிமார்களின் உடல்களைப் பூமி தின்னாது. அல்லாஹ் வானிலிருந்து ஒரு தண்ணீரை இறக்கிவைப்பான். (அழிக்கப்பட்ட) உடல்கள் வளர்ந்துவிடும். அல்லாஹ் மக்களை உயிரூட்டி எழுப்ப நாடினால் சூர் ஊதும் பொறுப்பிற்குரிய மலக்கு இஸ்ராஃபீல் அவர்களை உயிர்ப்பிப்பான். அவர் இரண்டாம் முறை சூர் ஊதுவார். அல்லாஹ் எல்லாப் படைப்புகளையும் உயிர்ப்பிப்பான். மக்கள் தம் மண்ணறைகளிலிருந்து அல்லாஹ் அவர்களை ஆரம்பமாக படைத்தது போன்று செருப்பு அணியாதவர்களாக நிர்வாணிகளாக விருத்தசேதனம் செய்யப்படாதவர்களாக வெளிவருவார்கள். அல்லாஹ் சொல்கிறான்:
சூர் ஊதப்படும் அந்நேரம் அவர்கள் மண்ணறையிலிருந்து அவர்களின் இறைவனிடம் விரைந்து வருவார்கள். (36:51)
அவர்கள் (தாங்கள் ஆராதனை செய்யும்) கற்களின் பால் விரைந்து செல்பவர்களைப்போல் அந்நாளில் கபுருகளிலிருந்து வெளியேறுவார்கள். அவர்களின் பார்வை கீழ்நோக்கி இருக்கும். இழிவு அவர்களைச் சூழ்ந்து கொள்ளும் அந்நாள் தான் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்டிருந்த நாளாகும். (70:43-44)
82-1 வானம் பிளந்து விடும்போது நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும்போது- கடல்கள் (பொங்கி ஒன்றால் ஒன்று) அகற்றப்படும் போது, கப்றுகள் திறக்கப்படும் போது, ஒவ்வோர் ஆத்மாவும், அது எதை முற்படுத்தி (அனுப்பி) வைத்தது, எதைப் பின்னே விட்டுச் சென்றது என்பதை அறிந்து கொள்ளும். (82:1-5)
இதன் பின் மக்கள் மஹ்ஷர் மைதானத்திற்கு கொண்டு வரப்படுவார்கள். அது பரந்த விசாலமான பூமியாகும். காஃபிர்கள் முகம் குப்புற கொண்டு வரப்படுவார்கள். எப்படி அவர்கள் முகம் குப்புற கொண்டு வரப்படுவர்கள்? என நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்களைப் பாதங்களால் நடக்க வைத்தவன் அவர்களை முகம் குப்புறவும் நடக்க வைக்க சக்தி உள்ளவன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அல்லாஹ்வின் நல்லுரையை; புறக்கணித்து நடந்தவன் மறுமையில் குருடனாக எழுப்பப்படுவான். அந்நாளில் சூரியன் மக்களை நெருங்கியிருக்கும். அப்போது மனிதர்கள் அவரவர்களின் செயல்கள் அளவிற்கு வேர்வையிலிருப்பார்கள். சிலருக்கு கணுக்கால் வரை வேர்வை இருக்கும். சிலருக்கு இடுப்பளவு இருக்கும். இன்னும் சிலர் முழுக்க வேர்வையில் மூழ்கிவிடுவார்கள்.
அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத அந்நாளில் அவனின் நிழலின் கீழ் சிலர் நிழல் கொடுக்கப்படுவார்கள். அங்கு இருப்பார்கள். நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத அந்நாளில் அல்லாஹ் ஏழு நபர்களுக்கு நிழல் கொடுப்பான். நீதமாக நடந்து கொண்ட ஆட்சியாளன் அல்லாஹ்வின் வணக்கத்திலேயே வளர்ந்த இளைஞன் தனது உள்ளத்தைப் பள்ளியுடன்; தொடர்பு படுத்திக் கொண்டிருந்த மனிதன் அல்லாஹ்வுக்காக நேசம் கொண்டு அதற்காகவே இணைந்து அதற்காகவே பிரிந்த இரு மனிதர்கள் அந்தஸ்தும் அழகுமுள்ள பெண் தவறு செய்ய அழைத்தபோது நிச்சயமாக நான் அல்லாஹ்வைப் பயப்படுகிறேன் எனக் கூறிய மனிதன் வலது கை கொடுப்பதை இடது கை அறியாவண்ணம் தர்மம் செய்யும் மனிதன் தனித்திருந்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்து கண்ணீர் வடித்த மனிதன். இது ஆண்களுக்கு மட்டுமல்ல. பெண்களுக்கும் தான். அவர்களும் தம் செயல்கள் குறித்து விசாரிக்கப்படுவார்கள். அவர்களின் செயல்கள் நல்லவையாகயிருந்தால் நன்மையும் தீயவையாக இருந்தால் தீமையும் உண்டு. கேள்வி கணக்கும் கூலியும் தண்டனையும் ஆண்களுக்கு இருப்பது போலவே பெண்களுக்கும் உண்டு.
அந்நாளில் மக்கள் கடினமான தாகத்திலிருப்பார்கள். அன்றைய ஒரு நாள்(நம் கணக்குப் படி) ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்குச் சமமாகும். எனினும் முஃமினுக்கு ஒரு தொழுகையை நிறைவேற்றும் அளவுக்கு அந்நேரம் கழிந்துவிடும். முஸ்லிம்கள் நபி(ஸல்) அவர்களின் தண்ணீர்த் தடாகத்திற்கு வந்து தண்ணீர் அருந்துவார்கள். தண்ணீர்த் தடாகமென்பது நமது நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்கு மட்டும் அல்லாஹ் கொடுத்த மிகப்பெரும் மரியாதையாகும். மறுமை நாளில் நபி(ஸல்) அவர்களின் சமுதாயத்தினர் இதில் நீர் அருந்துவார்கள். அதன் தண்ணீர் பாலை விட மிக வெண்மையானதாகவும் தேனைவிட மிகச் சுவையானத கவும்; கற்பூர மணத்தை விட மிக நறுமண முள்ளதாகவுமிருக்கும். அதன் பாத்திரங்கள் வானின் நட்சத்திரங்கள் அளவு இருக்கும். அதில் ஒரு முறை நீர் அருந்தியவன் அதன் பின் ஒருபோதும் தாகிக்கவே மாட்டான்.
மஹ்ஷர் மைதானத்தில் மக்கள் தங்களிடையே தீர்ப்புச் செய்யப்படுவதையும் கேள்வி கணக்குக் கேட்கப்படுவதையும் எதிர்பார்த்தவர்களாக அங்கு நீண்ட நேரமிருப்பார்கள். கடினமான வெப்பத்தில் நிற்பதும் எதிர்பார்ப்பதும் நீண்டு விடுகிறபோது மக்கள் தங்களிடையே தீர்ப்புச் செய்யப்படுவதற்காக அல்லாஹ்விடம் பரிந்துரை செய்பவர்களைத் தேடுவார்கள். அப்போது ஆதம்(அலை) அவர்களிடம் வருவார்கள். அவர்கள் தம் இயலாமையைக் கூறிவிடுவார்கள். பிறகு முறையே நூஹ்(அலை) இப்றாஹீம் (அலை) மூஸா(அலை) ஈஸா(அலை) என ஒவ்வொரு நபியிடமும் வருவார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் தமது இயலாமையைக் கூறிவிடுவார்கள். இறுதியாக முஹம்மது(ஸல்) அவர்களிடம் வருவார்கள். அப்போது அவர்கள் அதற்கு தாமே தகுதியானவர் எனக் கூறி அர்ஷிற்குக் கீழ் சுஜுது செய்வார்கள். அல்லாஹ் அவர்களுக்கு உதிக்கச் செய்கின்ற எல்லாப் புகழ் வார்த்தைகளையும் கொண்டு அல்லாஹ்வைப் புகழ்வார்கள். அப்போது முஹம்மதே! உமது தலையை உயர்த்தும் நீர் கேளும் கொடுக்கப்படுவீர். பரிந்துரை செய்யும் உமது பரிந்துரை ஏற்றுக் கொள்ளப்படும் எனக் கூறப்படும். அப்போது அல்லாஹ் தீர்ப்புச் செய்யப்படுவதற்கும் கணக்குக் கேட்கப்படுவதற்கும் அனுமதிவழங்குவான். முஹம்மது(ஸல்) அவர்களின் உம்மத்தினர்தாம் முதன் முதலில் கேள்வி கணக்கு கேட்கப்படுவார்கள்.
அடியான் செய்த செயல்களில் கேட்கப்படும் முதல் கேள்வி தொழுகை பற்றியாகும். அது சரியாக இருந்து எற்றுக்கொள்ளப்பட்டு விட்டால் ஏனைய செயல்கள் கவனிக்கப்படும்;. அது மறுக்கப்பட்டு விட்டால் ஏனைய செயல்களும் மறுக்கப்பட்டு விடும். இதுபோன்றே ஒரு அடியான் ஐந்து காரியங்கள் பற்றி விசாரிக்கப்படுவான். அதாவது அவன் தனது வாழ்நாளை எவ்வாறு கழித்தான் தன் வாலிபத்தை எப்படி பயன்படுத்தினான் தன் பொருளை எப்படி சம்பாதித்து எவ்வழியில் செலவழித்தான் தான் கற்றதில் எந்த அளவுக்கு செயல்படுத்தினான் என்றெல்லாம் விசாரிக்கப்படுவான்.
மேலும் அடியார்களிடையே தீர்ப்புச் செய்யப்படும் முதல் காரியம் இரத்தங்கள் (கொலை, காயம்)பற்றிய தீர்ப்பாகும். அந்நாளில் நன்மை தீமைகளைக் கொண்டே நியாயம் வழங்கப்படும். ஒரு மனிதனின் நன்மை எடுக்கப்பட்டு அது அவனால் பாதிக்கப்பட்டவனிடம்; கொடுக்கப்படும். நன்மைகள் தீர்ந்து விட்டால் பாதிக்கப்பட்டவனின்; தீமையை எடுத்து இவனிடம் போடப்படும். அங்கு ஸிராத் என்னும்; பாலம் அமைக்கப்படும். அது முடியை விட மெல்லிய தாகவும் வாளைவிட கூர்மையானதாகவுமிருக்கும். அது நரகத்தின் மீது அமைக்கடிருக்கும். மக்கள் அதில் அவரவர் செயல்களைப் பொருத்து கடந்து செல்வார்கள். சிலர் கண் சிமிட்டும் நேரத்திற்குள் கடந்து விடுவார்கள். சிலர் காற்று வேகத்தில் செல்வார்கள்;. வேறு சிலர் மிக விரைவாகச் செல்லும் குதிரை போன்றும் செல்வார்கள்;. இன்னும் தவழ்ந்து தவழ்ந்து செல்பவர்களுமிருப்பார்கள். அப்பாலத்தின் மீது கோர்த்திழுக்கக் கூடிய கொழுத்துச் சங்கிலிகளுமிருக்கும். அது மனிதர்களைப் பிடித்து நரகில் தள்ளிவிடும்.
காஃபிர்களும் அல்லாஹ் நாடிய பாவிகளான முஃமின்களும் நரகில் விழுந்து விடுவார்கள். காஃபி‏ர்கள் நிரந்தரமாக நரகிலேயே இருப்பார்கள். பாவியான முஃமின்கள் அல்லாஹ் நாடிய அளவிற்கு வேதனை செய்யப்பட்டு பின் சுவர்க்கம் செல்வார்கள் நரகம் சென்று விட்ட சிலருக்கு பரிந்துரை செய்வதற்காக நபிமார்கள் ரசூல்மார்கள் நல்லடியார்களில் அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு பரிந்துரை செய்ய அனுமதி வழங்குவான். இவர்களால் பரிந்துரை செய்யப்படுபவர்களை அல்லாஹ் நரகிலிருந்து வெளியேற்றுவான்.
இப்பாலத்தை கடந்து சென்ற சுவர்க்கவாசிகள் சுவர்க்கத்திற்கும் நரகத்திற்குமிடையே அமைக்கப்பட்டிருக்கும்; ஒரு பாலத்தில் நிற்பார்கள். அங்கு அவர்களில் சிலருக்கு சிலரிடமிருந்து கணக்குத் தீர்க்கப்படும். யார் தனது சகோதரனுக்கு அநியாயம் செய்திருக்கிறாரோ அவருக்கு நியாயம் வழங்கப்படாதவரை அல்லது பாதிக்கப்பட்டவர் அவனை திருப்தி கொள்ளாத வரை சுவர்க்கம் செல்ல முடியாது. சுவர்க்கவாசிகள் சுவர்க்கத்திலும் நரக வாசிகள் நரகத்திலும் நுழைந்து விட்டால் மரணம் ஒரு ஆட்டின் வடிவில் கொண்டு வரப்பட்டு சுவர்க்கத்திற்கும் நரகத்திற்குமிடையே அறுக்கப்படும். சுவர்க்கவாசிகளும் நரகவாசிகளும் அதைப் பார்ப்பார்கள். பிறகு சுவர்க்கவாசிகளே! உங்களுக்கு மரணமே கிடையாது இதிலேயே நீங்கள் நிரந்தரமாக இருங்கள் என கூறப்படும்.

Post a Comment

 
Top