GuidePedia

0

Image result for நல்லதை


மனிதன் ஒன்று முதல் ஐயறிவுகளைப் பெற்றுள்ள இடத்தினின்றும் முற்றிலும் மாறுபட்டவனாக விளங்குகின்றான். எதனையும் பகுத்துணரும் பக்குவத்தைப் பெற்றவனாகவும் திகழ்கிறான். எது உன்மையான செயல், எது தீமையான செயல் என்பதில் அவனுக்குப் படிப்படியாக தெளிவும் ஏற்பட்டு விடுகின்றது.
    சிந்தனைப் தெளிவும் சீர் தூக்கிப் பார்க்கும் மன நிலையும் ஏற்பட்டு விட்ட வளர்ந்த மனிதன் பகுத்தறிவினால் வாழ முற்படுகிறான். இந்நிலையில் காலங்காலமாக பரம்பரை பரம்பரையாக நடைமுறைப்படுத்தப்பட்ட பகுத்தறிவுக்கொவ்வாத சில சடங்குகள் சம்பிரதாயங்களையும் விட்டுவிட மனத் துணிவில்லாமல் அவன் தத்தளிக்கவும் செய்கிறான்.
    இந்நிலையில் இறை நம்பிக்கை கொண்டுள்ள முஸ்லிம்களாகிய நாம் எங்கனம் செயல்பட வேண்டும் என்பதை அல்குர்ஆன் நமக்கு அரிய வழிகாட்டியாகத் திகழ்கின்றது.
    மேலும் நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதை கொண்டு ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும், இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர். (அல்குர்ஆன் 3:104)
    மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (எனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்; தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்; இன்னும் அல்லாஹ்வின் மேல் நம்பிக்கை கொள்கிறீர்கள்; வேதத்தையுடையோரும் நம்பிக்கை கொண்டிருப்பின் (அது) அவர்களுக்கு நன்மையாகும் – அவர்களில் (சிலர்) நம்பிக்கை கொண்டோராயும் இருக்கின்றனர்; எனினும் அவர்களில் பலர் பாவிகளாகவே இருக்கின்றனர். (அல்குர்ஆன் 3:110)
    நல்லதை ஏவித் தீயதைத் தடுக்கும் கூட்டமானது மிக எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். மார்க்கத் தெளிவு மற்றவர்களை விட அவர்களுக்கு அதிகம் இருக்க வேண்டும். இல்லையேல், மற்றவர்களால் விமர்சிக்கப் படுவர். தன் மனதில் பட்டதை விருப்பு வெறுப்பை மார்க்கம் என்று கூறக்கூடாது. கற்பனையாக மார்க்கத்தை வியாபாரமாக்கியதால்தான் இன்றைய சமுதாயத்தில் சடங்குகளும் சம்பிரதாயங்களும் மெளலூதுகளும் பாத்திஹாக்களும் இன்ன பிற கேலிக் கூத்துகளான ‘பித்அத்களும்’ மார்க்கக் கடமைகளைப் போல் அதுவும் மிக முக்கிய கடமைகளாகச் சித்தரிக்கப் படுகின்றன.
    உங்கள் நாவுகள் பொய்யாக வர்ணிப்பது போல், இது ஹலாலானது, இது ஹராமானது என்று அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டாதீர்கள் – நிச்சயமாக, எவர் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுகிறார்களோ அவர்கள் வெற்றியடைய மாட்டார்கள். (அல்குர்ஆன் 16:116)
    தெள்ளத் தெளிவாகவே திருமறை தெளிவாக்கிவிட்டது. மன முரண்டாக மார்க்கத்தைப் பற்றி நாம் விளக்கம் செய்யக்கூடாது.
    நான் உங்களை வெள்ளைவெளேர் என்ற நிலையில் விட்டுச் செல்கிறேன். அதன் இரவும் பகலைப் போன்றது. அழிந்து நாசமாகக் கூடியவர்களைத் தவிர வேறு எவரும் அதில் வழி தவறவே மாட்டார்கள். அறிவிப்பவர்: இர்பால் இப்னு ஸாரியா (ரலி) நூல்: இப்னுமாஜா
    பித்அத் புரியும் ஒருவரது தொழுகை, நோன்பு, ஈகை, ஹஜ், உம்ரா, தியாகம், மார்க்கத்திற்காக முயற்சிகள் முதலிய அனைத்தும் அல்லாஹ்விடத்தில் ஒப்புக்கொள்ளப்பட மாட்டா. குழைத்த மாவிலிருந்து தலைமுடி எப்படி இலகுவாக வெளியேற்றப்படுமோ, அதே போல் பித்அத்காரன் இஸ்லாத்திலிருந்து வெளியேறிவிடுவான். அறிவிப்பாளர்: ஹுதைபா(ரலி) நூல்: ஸுனன் இப்னுமாஜ்ஜா
    இறைமறை இறைத்தூதர் வழிமுறை இவ்விரண்டைத் தவிர வேறு வழிமுறைகள் எத்துனை அழகாக இருப்பினும் பின்பற்றக் கூடாது என்பது வெளிப்படையாகவே விளங்கிவிட்டது.
    நவீன புதுமைகளை மார்க்கமாக எண்ணிச் செயல்பட்டு வந்தவர்கள் யாவரும் உண்மை தெரிந்த பிறகும் இறையச்சமும் இறை நம்பிக்கையும் சற்றுமின்றி, உண்மையான மார்க்கத்தின் பக்கம் அடியெடுத்து வைக்க மறுப்பதேன்? பழகிவிட்ட காரணமா? பழக்கத்தை விட மனமில்லாத காரணமா? நமக்கு மார்க்கம் பெரிதா பரம்பரைப் பழக்க வழக்கங்கள் பெரிதா? இறைவனுக்கு அஞ்சி சிந்தித்துச் செயல்பட முன்வாருங்கள்!
    இஸ்லாம் மனித வாழ்க்கையை மாண்புறச் செய்யவே விழைகின்றது. நம்முடைய மார்க்கமும் இலகுவான எளிய மார்க்கம்! மனிதன் தன் சக்திக்கு ஏற்ப செயல்படத்தக்க விதமாக அமைந்துள்ள எளிய மார்க்கம். மார்க்கம் சீர்திருத்தப்பட்ட ஒன்று. ஏற்கனவே எல்லாம் வல்ல இறைவனால் முழுமையுறச் செய்யப்பட்ட மார்க்கத்திலேயே நாம் இருக்கின்றோம். இதனை நம்மைச் சுற்றியுள்ளவர்களிடத்தே எடுத்தியம்புவதே நமது பணியாகும்.
    ஒவ்வொரு காலகட்டத்திலும் மார்க்கத்தை தம் மனோ இச்சைகளுக்கும் சுயநலங்களுக்கும் ஏற்ப வளைத்துக் கொள்ளும் போலி வேடதாரிகளும் இருக்கத்தான் செய்கின்றார்கள். அதே நேரத்தில் நன்மையை ஏவி தீமையைத் தடுக்கும் ஒரு குழுவினரும் இருந்து கொண்டேதான் இருப்பார்கள். அத் திருத்தொண்டர்களாக நீங்கள் இருக்கலாமே!  

Post a Comment

 
Top