GuidePedia

0


Post image for பிளவுபட்ட சமுதாயம்!ஒன்றுபட்ட சமுதாயமாக வாழ்ந்து உலக மக்களுக்கு முன்மாதிரியாகத் திகழ வேண்டிய முஸ்லிம்கள் மத்ஹபின் பெயராலும், தரீக்காக்களின் பெயராலும், அரசியல் கட்சிகளின் பெயராலும் பல பிரிவினர்களாகப் பிரிந்து சிதறிக் கிடப்பதை பார்க்கிறோம். தனித்தனிப் பெயரில் இவ்வாறு பல பிரிவுகளாகச் செயல்படுவதை அல்லாஹ் அனுமதித்துள்ளானா? அல்லது பிரிவுகளை தடை செய்துள்ளானா என்பதை குர்ஆனின் வாயிலாக அறிந்து அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு ஏற்ப நமது வாழ்வை அமைத்துக் கொண்டால் மட்டுமே இந்த உலகிலும், மறு உலகிலும் நாம் வெற்றியடைய முடியும்.
குர்ஆனின் தீர்ப்பு:
அல்லாஹ் கூறுகிறான்: எவர்கள் தங்கள் மார்க்கத்தை (தங்கள் இஷ்டப்படி பலவாறாக)ப் பிரித்து பல பிரிவினராக பிரிந்து விட்டனரோ அவர்களுடன் உங்களுக்கு யாதொரு சம்பந்தமும் இல்லை. அவர்களுடைய வி­யமெல்லாம் அல்லாஹ் விடமே இருக்கின்றது. அவர்கள் செய்து கொண்டிருந்த (இத்தீய)வற்றைப் பற்றி பின்னர் அவன் (பிரிவினை வாதிகளான) அவர்களுக்கு அறிவித்து விடுவான்.
குர்ஆன் : 6:159
மேலும் 6:153, 10:19, 21:92,93, 23:53, 30:32 ஆகிய வசனங்களின் மூலமாகவும் மார்க்கத்தில் பிரிவினைகளை ஏற்படுத்தக் கூடாது என்பதை அல்லாஹ் தெளிவாக்கியுள்ளான்.
மகிழ்ச்சியடைபவர்கள்:
மார்க்கத்தின் பெயரால் பிரிவினைகளை உருவாக்குவது தடை செய்யப்பட்ட காரியம் என்பதை உணர்ந்து தங்களை திருத்திக் கொள்ள வேண்டிய முஸ்லிம்கள் தனித்தனி பிரிவாக செயல்பட்டுக் கொண்டு நம்மை போன்று யார் சமுதாய சேவைகள் செய்கிறார்கள் என்று தமக்குத்தாமே திருப்தியடைந்து மகிழ்ச்சியடைகின்றனர். குர்ஆன் :23:53, 30:32
மார்க்கத்திற்கு முரணாக பிரிவினையில் இருந்து கொண்டு பற்பல நல்ல காரியங்கள் செய்வதால், அதை மக்கள் ஆதரிப்பதால் பிரிவினைகள் அல்லாஹ்விடம் அங்கீகாரம் பெற்றதாக ஆகிவிடாது என்பதை முஸ்லிம்கள் உணர வேண்டும். நடிகர்களின் பெயரால் மன்றங்கள் அமைத்து பற்பல நல்ல காரியங்களை செய்தாலும் நல்ல காரியங்களை காரணம் காட்டி நாம் ரசிகர் மன்றங்களை ஆதரிக்கமாட்டோம். மார்க்கத்தின் அடிப்படையில் ரசிகர் மன்றங்கள் தவறானது என்றே கூறுவோம். அதைப் போன்றே இயக்கங்கள் நல்ல காரியங்கள் செய்தாலும் பிரிவினை இயக்கங்கள் இஸ்லாத்தின் அடிப்படையில் தவறானவை என்றே கூற வேண்டும்.
ஷைத்தானின் வேலை:
எனக்கும் என் சகோதரர்களுக்கும் இடையில் ஷைத்தான் பிரிவினை ஏற்படுத்தினான்… (குர்ஆன்: 12:100) என்று யூசுஃப் நபியவர்கள் கூறியதில் இருந்து சகோதரர்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்துவது ஷைத்தானின் வேலை என்பதை அறிய முடிகிறது. இந்த வசனத்தின் கருத்தை பிரதி பலிக்கும் நபிமொழி ஒன்றை பார்ப்போம். நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அரேபிய தீபகற்பத்தில் தொழுகையாளர்கள் தன்னை வணங்குவார்கள் என்ற நம்பிக்கையை ஷைத்தான் இழந்து விட்டான். எனினும் அவர்களிடையே பிளவை உருவாக்குவான்.
அறிவிப்பாளர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ்(ரழி) நூல்: முஸ்லிம் 5417
தொழுகையாளிகள் சிலைகளை வழிபடமாட்டார்கள். இறந்தவர்களிடம் உதவி தேட மாட்டார்கள் என்பதை ஷைத்தான் அறிந்த பிறகு தொழுகையாளிகளிடையே பிளவை உண்டாக்குவான் என்று சொன்னால் பிரிவினை ´ஷிர்க்கிற்கு நிகரான பாவமாக இருக்குமா? அல்லது சாதாரண பாவமாக இருக் குமா? முஸ்லிம்களே சிந்தியுங்கள். மார்க்கத்தில் பிரிவினைகளை உருவாக்குவது பெரும்பாவம் என்பதை உணர்ந்த காரணத்தினால் தான், நபி(ஸல்) அவர்களின் மரணத்திற்கு பிறகு சில வருடங்களில் ஏற்பட்ட குழப்பமான காலங்களில் கூட தீயோரிடமிருந்து தங்களை வேறுபடுத்திக் காட்டிக் கொள்வதற்காக எந்த ஒரு பிரிவினை ஜமாஅத்தையும் ஸஹாபாக்கள் யாரும் ஆரம்பிக்கவில்லை. மாறாக தீயவர்களே தங்களை காரிஜிய்யாக்கள் என்றும் கத்ரிய்யா என்றும் ´ஷியாக்கள் என்றும் ராஃபிளாக்கள் என்றும் சொல்லிக் கொண்டு புதுப்புது பிரிவு ஜமாஅத்துகளை உருவாக்கினார்கள். நபி (ஸல்) அவர்களின் நேரடித் தொடர்பை பெற்றிருந்த நல்லோர்கள் யாரும் பிரிவினை ஜமாஅத்துகளை ஆரம்பிக்கத் துணியவில்லை எனும்போது நாம் பெட்டிக் கடைகளை ஆரம்பிப்பதைப் போன்று சர்வ சாதாரணமாக பிரிவினை ஜமாஅத்துகளை ஆரம்பிப்பது அதற்கு உறுதுணையாக இருப்பது போன்றவையெல்லாம் அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்ற செயலாக இருக்குமா?
முஸ்லிம்களுக்கு வேதனை:
மார்க்கத்தின் பெயரால் பிரிவினையை உருவாக்குவதை அல்லாஹ் அனுமதிக்கவில்லை என்பது மட்டுமில்லாமல் பிரிவினை என்பது அல்லாஹ் வழங்கும் வேதனைகளில் ஒருவகை என்பதை முஸ்லிம்கள் புரிய வேண்டும். அல்லாஹ் கூறுகிறான்: “”உங்களுக்கு மேலிருந்தோ உங்கள் கால்களுக்கு கீழிருந்தோ உங்களுக்கு வேதனையை அனுப்புவதற்கும் அல்லது உங்களை பல பிரிவுகளாகப் பிரித்து உங்களில் சிலர் தரும் துன்பத்தை வேறுசிலர் சுவைக்கும்படிச் செய்வதற்கும் அவன் ஆற்றல் உடையவன்” என்று (நபியே) நீர் கூறுவீராக. அவர்கள் புரிந்து கொள்வதற்காக நாம் எவ்வாறெல் லாம் வசனங்களை மீண்டும் மீண்டும் விவரிக்கின் றோம் என்பதை நீர் கவனிப்பீராக. (குர்ஆன்: 6:65)
1. இடி, மின்னல், காற்று, கனமழை போன்ற வற்றின் மூலமாக தலைக்கு மேலிருந்து வேதனை, 2.நிலநடுக்கம், பூகம்பம், கடல் கொந்தளிப்பு போன்ற வற்றின் மூலமாக கால்களுக்கு கீழிருந்து வேதனை, 3.பல பிரிவுகளாகப் பிரிந்து ஒருவருக்கொருவர் துன்புறுத்திக் கொள்ளும் வகையில் வேதனை என மூன்று வகையில் வேதனை இறக்கிட ஆற்றல் படைத்தவன் என மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான். பல பிரிவுகளாகப் பிரிந்து செயல்படுவது அல்லாஹ்வின் புறத்திலிருந்து முஸ்லிம்களுக்கு வேதனை இறங்கியுள்ளது என்பதை உணராமல் இயக்கங்கள் மூலமாகச் சாதனைப் படைத்து விட்டதாகவும், சத்தியத்தில் இருப்பதாகவும் நினைத்து நாம் ஏமாந்து கொண்டிருக்கிறோம்.
கருத்து வேறுபாடு:
கருத்து வேறுபாடுகளின் காரணமாகத்தான் பல பிரிவுகள் உருவாகின்றது என்று பரவலாக சொல்லப் படுவதை நாம் அறிவோம். இந்த நிலை தி.க.வில் கருத்து வேறுபாடு கொண்டு தி.மு.க., தி.மு.கவில் கருத்து வேறுபாடு கொண்டு அதிமுக, மதிமுக இன்னும் இது போன்ற பல இயக்கங்களை ஆரம்பித்த மாற்று மத நண்பர்களுக்கு வேண்டு மென்றால் இந்தக் கருத்துப் பொருந்தலாம். அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்ட முஸ்லிம்களுக்கு இந்தக் கருத்தைப் பொருத்த முடியாது. ஏனென்றால் நபி(ஸல்) அவர்களுக்கும் (அபூபக்கர்(ரழி) அவர்களைத் தவிர) ஒட்டுமொத்த ஸஹாபாக்களுக்கும் ஹுதைபிய்யா உடன்படிக்கையின் போது கருத்து வேறுபாடு ஏற்பட்டது. (பார்க்க: புகாரீ 4251) மேலும் ஹுனைன் போரின் வெற்றிக்கு பிறகு நபி(ஸல்) அவர்களுக்கும் ஸஹாபாக்களில் சிலருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. (பார்க்க புகாரீ 4337) இதை போன்றே உமர்(ரழி) அவர்களிடம் எனக்கு மாறு செய்வதையே நீங்கள் விரும்புகிறீர்கள் என்று அபூபக்ர்(ரழி) அவர்கள் சொல்லும் அளவிற்கு அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் இருந்துள்ளது. (பார்க்க புகாரீ 7302) அலீ(ரழி) அவர்களை பார்த்து எனக்கெதிராக நிறைய மாறுபட்ட கருத்துகளை நீங்கள் கூறுகின்றீர்கள் என்று உதுமான்(ரழி) அவர்கள் சொல்லும் அளவிற்கு அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் இருந்துள்ளது. (பார்க்க அஹ்மத் 745) இது போன்றே பல விஷயங்களில் நபி தோழர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் இருந்துள்ளன. கருத்து வேறுபாட்டைக் காரணம் காட்டி மக்கள் மத்தி யில் தனக்குள்ள செல்வாக்கு, மதிப்பு ஆகியவற்றைப் பயன்படுத்தி எந்த ஒரு நபிதோழரும் பிரிவினை ஜமாஅத்துகளை ஆரம்பிக்கவில்லை எனும்போது கருத்து வேறுபாட்டைக் காரணம் காட்டி யாரேனும் இஸ்லாத்தின் பெயரால் பிரிவினையை உருவாக்கினால் அது குர்ஆனுக்கு எதிரான செயலாகும்.
அல்லாஹ் கூறுகிறான்: நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பி யிருந்தால் அல்லாஹ்வுக்கே கட்டுப்படுங்கள். இத்தூதருக்கும், உங்களில் அதிகாரம் உடையோருக் கும் கட்டுப்படுங்கள்! ஏதேனும் ஒரு வி­யத்தில் நீங்கள் முரண்பட்டால் அதை அல்லாஹ்விடமும், இத் தூதரிடமும் கொண்டு செல்லுங்கள். இதுதான் உங்களுக்கு நன்மையாகவும் அழகிய முடிவாகவும் இருக்கும். (குர்ஆன் : 4:59)
பொறாமை:
பிரிவினைக்குக் கருத்து வேறுபாடுகள் காரணமில்லை எனும்போது பிரிவினைக்கு உண்மையான காரணம் என்ன என்பதை குர்ஆனின் மூலமாக பார்ப்போம். அவர்களிடம் (அல்லாஹ்வின் நூலை பற்றிய) அறிவு வந்த பின்னும் தங்களுக்கிடையே ஏற்பட்ட பொறாமையின் காரணமாகவேத் தவிர அவர்கள் பிளவுபடவில்லை. (குர்ஆன்: 42:14)
பிரிவினைக்கு அடிப்படை காரணம் பொறாமை தான் என்பதை 2:213, 3:19, 45:17 ஆகிய வசனங்களிலும் காணலாம்.
…மக்களிடையே அழகானதையே பேச வேண்டும். (குர்ஆன்: 2:83)
அழகியவற்றையே பேசுமாறு எனது அடியார் களுக்கு கூறுவீராக! நிச்சயமாக ஷைத்தான் (தவறான பேச்சை ஏற்படுத்தி) அவர்களுக்கிடையில் பிளவை ஏற்படுத்துவான். நிச்சயமாக ஷைத்தான் மனிதனுக்குப் பகிரங்க எதிரியாவான். (குர்ஆன்:17:53) இதுபோன்ற வசனங்களைக் கருத்தில் கொண்டு கருத்து வேறுபாடுள்ளவர்களிடம் சகோதரத்துவத்துடன் பேசினால் நிச்சயமாக பிரிவுகள் ஏற்படாது.
ஆனால் ஆதிக்க மனப்பான்மைக் கொண்ட பொறாமைக் குணம் கொண்டவர்கள் இத்தகைய உயர் பண்புகளை மேற்கொள்ளாமல் அல்லாஹ்வை பற்றிய பயம் சிறிதும் இல்லாமல் தங்களது கெளரவத்தை நிலைநாட்ட சுயநலனுக்காக சமுதாயத்தைப் பிளவுபடுத்துகிறார்கள். இத்தகையவர்களை எச்சரிக்கை செய்யும் விதமாக உள்ள நபிமொழி ஒன்றை நினைவூட்டுகிறோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உங்களுக்கு முன்னிருந்த சமுதாயங்களின் நோய்களான பொறாமை, பகைமை ஆகியவை உங்களிடத்திலும் ஊடுருவி விட்டது. அவை உங்களை மொட்டையடித்து விடும் (மொட்டையடிப்பதென்றால்) முடியை அன்று (உங்களை) மார்க்கத்தையே மொட்டையடித்து விடும்.
அறிவிப்பாளர்: ஸுபைர்(ரழி) நூல்:திர்மிதி 2434 அஹ்மத் 1338
பிரிவுகளின் கெடுதிகள்:
பொறாமையின் காரணத்தினால் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டு முஸ்லிம்களுக்கு நாங்களும் நன்மை செய்யப் போகிறோம் என்ற பெயரால் பலரும் பிரிவு ஜமாஅத்துகளை ஆரம்பித்ததின் மூலம் சமுதாயத்திற்கு எப்படிப்பட்ட மக்கள் கிடைத்துள்ளார்கள் என்பதைப் பாருங்கள்.
1. வேதக்காரர்கள் தங்களது அறிஞர்கள், பாதிரிகள் எதைச் சொன்னாலும் அதை அப்படியே பின்பற்றி அவர்களை வழிபட்டதை அல்லாஹ் 9:31ல் கூறுவதை போன்று தான் சார்ந்திருக்கும் ஜமாஅத்தின், இயக்கத்தின் தலைவர்கள் எதைச் சொன்னாலும் அதை அப்படியே கண்மூடித்தனமாக பின்பற்றித் தலைவர்களை வழிபடுபவர்கள்.
2.அவர்கள் சொல்லைச் செவியுற்று அதில் அழகானதைப் பின்பற்றுவார்கள். அவர்களுக்கே அல்லாஹ் நேர்வழி காட்டினான். அவர்களே அறிவுடையவர்கள் குர்ஆன் 39:18 என்ற வசனத் திற்கு முரணாக மாற்றுக் கருத்துக் கொண்டவர்களின் புத்தகங்களைப் பிரசுரங்களை சற்றும் ஏறெடுத்துக் கூட பார்க்காமல் அலட்சியம் செய்பவர்கள்.
3. உங்களை நீங்களே பரிசுத்தமாகக் கருதிக் கொள்ளாதீர்கள் (இறை) அச்சமுடையவர் யார் என்பதை அவனே நன்கறிவான். குர்ஆன் 53:32, 4:49 ஆகிய வசனங்களுக்கு மாற்றமாக எங்களது ஜமாஅத் மட்டும்தான் தூய்மையானது என்று கூறுபவர்கள்.
4. மாற்றுக் கருத்துக் கொண்டவர்களை தரம் தாழ்ந்த வார்ததைகளால் விமர்சனம் செய்பவர்கள்.
5. ஆதாரமில்லாமல் தனி நபரை விமர்சனம் செய்பவர்கள், அவதூறுகளைத் துணிந்து பரப்புகிறவர்கள்.
6. ஆதாரமில்லாமல் மற்றவர்களை குறை சொல்லி நேரத்தையும், பொருளாதாரத்தையும், உடல் உழைப்பையும் வீணடிப்பவர்கள்,
7. ஜமாஅத்தின், இயக்கத்தின் வளர்ச்சியை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படுபவர்கள்,
8. கூட்டத்தைக் கொண்டு பெருமையடிப்பவர்கள்,
9. ஒரே கொள்கை கொண்ட விஷயத்தில் கூட ஒன்று சேராமல் இருப்பவர்கள்,
10. மாற்றுக் கருத்துடையவர்களிடம் எங்களது அறிஞர்களுடன் விவாதம் செய்யத் தாயாரா? என்று ஆணவத்துடன் கேட்பவர்கள்.
11. பதவிகொடுத்தால் மட்டுமே ஜமாஅத்தின் பணிகளை முன்னின்று செய்பவர்கள்.
இதுபோன்ற குணங்களே (ஒருசில சகோதரர் களைத் தவிர) பிரிவினை இயக்கங்களில் உள்ளவர்களிடம் காணப்படுகிறது. இவர்களால் சமுதாயம் நன்மையை அடையுமா? சீரழிவை அடையுமா? முஸ்லிம்களே சிந்தியுங்கள்.
முஸ்லிம்களில் ஒருவன் என்போம்:
நபி(ஸல்) அவர்களின் நபித்துவத்திற்கு முன் பல்வேறு பிரிவுகளாக அரபிகள் சிதறிக் கிடந்தார்கள். பிளவுபட்ட காரணத்தினால் அந்த சமுதாயத்தில் அடிக்கடி மோதல்கள் நிகழ்ந்து கொண்டிருந்தது. இந்நிலையில் நபி(ஸல்) அவர்கள் அந்த மக்களிடம் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும்படி பிரச்சாரம் செய்ததின் விளைவாக அவர்கள் ஒருவர் பின் ஒருவராக இஸ்லாத்தைத் தழுவினார்கள்.
பிரிவினை வாதம் பேசியவர்கள் அதையெல்லாம் தூக்கி எறிந்து விட்டுச் சகோதரர்களாக மாறினார்கள். அறியாமைக் காலத்தில் அம்மக்கள் பிரிந்து கிடந்ததை உணர்த்தும் வகையில் பிற்காலத்தல் நபி(ஸல்) அவர்கள் ஸஹாபாக்களைப் பார்த்து நீங்கள் (இன வாதம்) பேசி பிரிந்து (சிதறி) கிடந்தீர்கள். அல்லாஹ் என் மூலமாக உங்களை இணக்கமாக்கவில்லையா? (பார்க்க முஸ்லிம் 1917) என்று கேட்டார்கள்.
இஸ்லாத்தைத் தழுவியதற்குப் பிறகு சிலைவழிபாடு, பிரிவினை போன்றவற்றிலிருந்து மீண்ட அந்த நல்லோர்கள் தங்களை முஸ்லிம்கள் என்ற பெயரால் மட்டுமே அறிமுகம் செய்து கொண்டார்கள். இதற்கு ஏராளமான நபிமொழிகளைச் சான்றாக காட்ட முடியும். இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் கூறியதா வது: நபி (ஸல்) அவர்கள் “அர்ரவ்ஹா’ எனும் இடத்தில் ஒரு பயணக் குழுவினரைச் சந்தித்தார்கள். அப்போது இக் கூட்டத்தினர் யார்? என்று (நபியவர்கள்) கேட்டார் கள். அதற்கு அவர்கள் (நாங்கள்) முஸ்லிம்கள் என்றார்கள். நூல்: முஸ்லிம் 2596.
ஸஃதுபின் அபீவக்காஸ்(ரழி) அவர்கள் தனிப்பட்ட ஒரு மனிதரை முஃமீன் என்று சொன்னபோது அதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக நபி(ஸல்) அவர்கள் அவரை முஸ்லிம் என்று சொல்லுங்கள் என்று கூறிய செய்தியை புகாரீ 1478 முஸ்லிம் 1909 அஹ்மத் 1440 ஆகிய நூல்களில் பார்க்கலாம். தனது ஆட்சியின்போது அல்லாஹ்வை நம்பிக்கை கொண்ட மக்களை பார்த்து உமர்(ரழி) அவர்கள் முஸ்லிம் சமுதாயமே என்று அழைத்த செய்தியை புகாரீயில் (ஹதீஃத் எண் 1472) காணலாம். அலீ(ரழி) அவர்கள் நான் முஸ்லிம்களில் ஒருவன் என்று கூறிய செய்தியை புகாரீ ஹதீஃத் எண் 3671ல் பார்க்கலாம்.
அல்லாஹ்வின் அருளால் நபி(ஸல்) அவர் களின் மூலமாக இஸ்லாத்தைத் தழுவிய அந்த சமுயாத மக்கள் தங்களை முஸ்லிம்கள் என்று மட்டும் சொல்லிக் கொண்டார்களே தவிர தங்களை சுன்னத் ஜமாஅத் என்றோ, ஜாக் ஜமாஅத் என்றோ, தவ்ஹீத் ஜமாஅத் என்றோ, தான் இந்த ஜமாஅத்தைச் சார்ந்தவன், அந்த ஜமாஅத்தைச் சார்ந்தவன் என்றோ ஒருபோதும் கூறியதில்லை.
நபி(ஸல்) அவர்களும் இவ்வாறு ஒருபோதும் கூறியதில்லை. இவற்றையயல்லாம் விட அல்லாஹ் தனது நூலில் அவனே உங்களுக்கு முஸ்லிம்கள் எனப் பெயரிட்டான். (குர்ஆன்: 22:78) என்று கூறியுள்ளான். நபி(ஸல்) அவர்களுக்கு முன்பு வாழ்ந்த நபிமார்கள் உட்பட அல்லாஹ்வை ஏற்றுக் கொண்ட அனைவரும் தங்களை முஸ்லிம்களில் உள்ளவர்கள் என்று மட்டுமே சொல்லிக் கொள்ள வேண்டும் என்ற விஷயத்தை 2:132,133, 3:64, 80,102, 5:111, 6:163, 7:126, 10:72,84,90, 11:14, 12:101, 15:2, 16:102, 21:108, 27:31,42, 28:53, 29:46, 30:53, 39:12, 41:33, 43:69, 46:15, 51:36, 68:35, 72:14 ஆகிய வசனங்களில் பார்க்கலாம். மேற்கண்ட வசனங்களின் அடிப்படையில் நம்மை முஸ்லிம்களில் உள்ளவர்கள் என்று மட்டும் சொல்லிக் கொண்டு அல்லாஹ்வின் கயிறான குர்ஆனை பற்றிப் பிடித்து வாழ்ந்தால் நபி(ஸல்) அவர்களது காலத்தில் முஸ்லிம்கள் உயர் நிலையை அடைந்ததைப் போன்று நாமும் அல்லாஹ்வின் அருளால் உயர்நிலையை அடைவோம்.
குர்ஆன், ஹதீஃத் பேசுவோரே:
மத்ஹபுகள் இஸ்லாத்திற்கு எதிரானது எனக் கூறும் JAQH மற்றும ்TNTJ சகோதரர்களே! மத்ஹபுகள் ஏன் கூடாது என்று உங்களிடம் கேட்டால் அபூ ஹனீஃபா இமாமை பின்பற்றச் சொல்கிறார்கள். மேலும் மத்ஹபில் குர்ஆனுக்கும், ஹதீஃதிற்கும் முரண்படும் ஏராளமான சட்டங்கள் உள்ளன. ஆகையால் மத்ஹபுகள் கூடாது என்கிறீர்கள். அப்படியென்றால் அபூஹனீஃபா இமாமைப் பின் பற்றக் கூடாது, மத்ஹபு சட்டங்கள் தேவையில்லை என்று கூறிவிட்டால் மத்ஹபுகள் சரியானதாக ஆகி விடுமா? மேலும் ஒருவர் அபூஹனீஃபா இமாமை பின்பற்றக் கூடாது, மத்ஹபில் உள்ள சட்டங்களையும் பின்பற்றக் கூடாது.
குர்ஆன், ஹீதஃத் மட்டும்தான் மார்க்கம் என்று சொல்லிக் கொண்டு தான் ஹனஃபி ஜமாஅத்தை சார்ந்தவன் என்றோ, ஷாஃபி ஜமாஅத்தை சார்ந்த வன் என்றோ சொல்லிக் கொண்டால் அது சரியா என்று உங்களிடம் கேட்டால், குர்ஆன் ஹதீஃத் அடிப்படையில் முறையான பதிலை உங்களால் தரமுடியாது. பிரிவினைகளை இஸ்லாம் ஆதரிக்கிறதா என்பதை குர்ஆனிலிருந்து அறிந்து கொண்டால் மட்டுமே இத்தகையக் கேள்விகளுக்கு முறை யானப் பதிலைத் தரமுடியும்.
இவ்வாறு பிரிவினைகளைப் பற்றி குர்ஆனி லிருந்து நீங்கள் அறிய முற்பட்டால் நீங்கள் சார்ந்திருக்கும்JAQH மற்றும்TNTJ ஆகிய ஜமாஅத் துகள் குர்ஆன், ஹதீஃதிற்கு எதிரானவையே என்பது உங்களுக்கே தெளிவாகப் புரியவரும். ஆரம்ப காலக் கட்டத்தில் மத்ஹபுகளை எதிர்க்கும்போது மத்ஹபுகள் முஸ்லிம்களைப் பிளவுபடுத்துகிறது. எனவே இத்தகைய மத்ஹபுகளை தூக்கி எறிய வேண்டும் என்று கூறிப் பிரச்சாரம் செய்யப்பட்டது.
இந்தக் காலக் கட்டத்தில் ஷரீஅத் பாதுகாப்புப் பேரவை என்ற அமைப்பு மத்ஹபை நியாயப்படுத்திப் பிரச்சாரங்களை முடுக்கி விட்டது. அப்போது கலீல் அஹ்மது கீரனூரி அவர்கள் நான்கு மத்ஹபுகள் முஸ்லிம்களைப் பிளவுபடுத்துகிறது என்று கூறுகிறீர்கள். ஒரு வாதத்திற்கு இதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் பிரிவினை கூடாது என்று சொல்லி வரும் நீங்கள் 10 வருடங்களில் 7 பிரிவாகப் பிரிந்து விட்டீர்களே; முதலில் 7ஐ ஒன்றாக்கி விட்டு பிறகு மத்ஹபை பற்றிப் பேசுங்கள் என்று கூற ஆரம்பித்தார்.
இந்தக் காலகட்டத்தில் குர்ஆன், ஹதீஃத் மட்டும் தான் மார்க்கம் என்று சொல்லக் கூடியப் பேச்சாளர் கள் இனியும் பிரிவினையைப் பற்றிப் பேசினால் நம்முடைய பிரிவினை இயக்கத்திற்கு ஆபத்து வந்துவிடும் என்பதைப் பயந்து மத்ஹபுகள் முஸ்லிம்களைப் பிளவு படுத்துகிறது என்ற பிரச்சாரத்தைச் சப்தமில்லாமல் கைவிட்டு விட்டனர். இவர்களின் இந்தச் சுயநல நடவடிக்கை அல்லாஹ்வின் மார்க்கத்திற்குச் செய்த துரோகமில்லையா? சகோதரர்களே! அல்லாஹ் நமக்கு முஸ்லிம்கள் என்று பெயர் வைத்திருக்க எந்த ஒரு ஆதாரமுமில்லாமல்JAQH என்றும்TNTJ என்றும் பெயர்கள் வைத்துள்ளீர்களே! இது குர்ஆன் ஹதீஃதிற்கு உட்பட்ட செயலா? தயவு செய்து நிதானமாகச் சிந்தியுங்கள். “”நீங்களும் உங்கள் முன்னோர்களும் சூட்டிக் கொண்ட வெறும் பெயர்களைப் பற்றி என்னிடம் தர்க்கம் செய்கிறீர்களா? அதுபற்றி அல்லாஹ் எந்த சான்றையும் அருளவில்லை. (குர்ஆன்: 7:71)
யாருக்குப் பயன்தரும்:
மத்ஹபுகளின் மூலமாகவும், இயக்கங்களின் மூலமாகவும் தங்களது உலக வாழ்வைச் செழிப் பாக்கிக் கொள்பவர்கள், கூட்டத்தைக் கொண்டு பெருமையடிப்பவர்கள், காவல் துறையில் தங்கள் இயக்கத்திற்கு உள்ள செல்வாக்கைச் சொல்லிப் பெருமிதம் கொள்பவர்கள், அரசியல்வாதிகளின் நட்பைக் கொண்டு மகிழ்ச்சியடைபவர்கள், ஜமாஅத்தில் பொருளாதார உதவியைப் பெறுவதில் குறியாய் இருப்பவர்கள், பொழுது போக்கிற்காக மார்க்கத்தைப் பேசுகிறவர்கள், தலைவர்களின் பேச்சைக் கண்மூடித் தனமாகப் பின்பற்றுபவர்கள் இத்தகையவர்களிடம் பிரிவினைகள் கூடாது என்று குர்ஆனிலிருந்து எத்தனை ஆதாரங்களைக் காட்டினாலும் அவர்கள் தங்களது தவறை உணர்ந்து தங்களைத் திருத்திக் கொள்ள முன் வரமாட்டார்கள்.
பூமியில் பெருமையடிப்பவர்களை, என் அத்தாட் சியை விட்டும் திருப்பி விடுவேன். அவர்கள் ஒவ்வொரு சான்றையும் (தெளிவாக) கண்டாலும் அவற்றை நம்பமாட்டார்கள். தவறான வழியைக் கண்டாலோ அதையே ஏற்பார்கள். ஏனெனில் நம் அத்தாட்சிகளை அவர்கள் பொய்ப்பித்து, அவற்றைப் புறக்கணித்தும் வருகின்றனர். (7:146)
சுயவிளக்கங்கள் கொடுத்துப் பிரிவினையை நியாயப்படுத்திப் பேசுவார்கள் என்பது எங்களுக்கு நன்கு தெரியும். குர்ஆன், ஹதீஃத் மட்டும்தான் மார்க்கம் என்று வெறும் வாயளவில் கூறாமல் தனது வாழ்க்கையிலும் குர்ஆனை, ஹதீஃதைப் பின்பற்ற வேண்டும் என்ற தூய்மையான எண்ணத்தில் உள்ளவர்கள் தங்களது அறியாமையினால் இத்தகைய பிரிவுகளில் சிக்கியிருந்தால் பிரிவினைகள் கூடாது என்பதற்கு நாங்கள் முன்வைத்த ஆதாரங்களைப் பார்த்து அல்லாஹ்வின் அருளால் அனைத்துப் பிரிவுகளிலிருந்தும் விலகி தன்னை முஸ்லிம்களில் உள்ளவன் (41:33) என்று மட்டும் சொல்லிக் கொள்ள முன்வருவார்கள். இத்தகைய நபர்கள் வெகு சொற்பமாகவும் இருக்கலாம்.
தம்மிடம் தெளிவான சான்றுகள் வந்த பின்பு முரண்பட்டும் பிரிந்து விட்டோரைப் போல் நீங்களும் ஆகிவிடாதீர்கள். இத்தகையவர்களுக்கே (மறுமையில்) மகத்தான வேதனை உண்டு. (குர்ஆன்:3:105)

Post a Comment

 
Top