அல்குர் ஆனின் வழியில் அறிவியல்………….
அல்லாஹ் மனிதர்களைப்படைத்து, அவர்களுக்கு வேண்டிய எல்லா வாழ்வாதாரங்களையும் ஏற்படுத்தியது மட்டுமல்லாது உலகில் உள்ள அனைத்தும் மனிதர்களுக்கு பயன் தருபவைகளாக அமைத்துள்ளான்.இந்த வகையில் கால்நடைகளைப்பற்றி அல்லாஹ் கூறுகின்றான்.
‘ (மனிதர்களே!) ஆடு,மாடு, ஒட்டகம் போன்ற கால்நடைகளையும் அவனே உங்களுக்காக படைத்திருக்கின்றான். அவற்றில் உங்களுக்காக (குளிரை தடுத்துக்கொள்ளக்கூடிய) கதகதப்புண்டு. இன்னும் (அநேக) பயன்களுமுண்டு. மேலும் நீங்கள் அவற்றிலிருந்து புசிக்கிறீர்கள். “ அல்குர் ஆன் -16:5
மேலும் வேறொரு வசனத்தில்,
“(ஆடை போன்ற) பற்பல பொருள்களையும் தயாரிப்பதற்கு, அவற்றில் (செம்மறியாட்டின்) கம்பளி, (ஒட்டகத்தின்) உரோமம், (வெள்ளாட்டின்) முடி,ஆகியவைகளையும் (அவன் உங்களுக்காக படைத்திருக்கின்றான்.அவற்றாலான பொருள்கள்) ஒரு காலம் வரையில் உங்களுக்கு பயன்படுகின்றன.” –அல்குர்ஆன் -16:80
மனிதனின் வாழ்விற்கு அடிப்படைதேவைகள் மூன்று,உணவு,
உடை, உறைவிடம். இம்மூன்றும் கால்நடைகளிளிருந்து அவன் பெற்றுக்கொண்டதால் ஆடு, மாடுகளுடான தொடர்பு ஆதி மனிதனிலிருந்து தொடங்கிவிட்டது. உதாரணமாக மனிதர்களின் தந்தை ஆதம்(அலை) அவர்களின் மகன்களைப்பற்றி அல்லாஹ் கூறுகின்றான்,
“ஆதமுடைய (ஹாபீல்,காபீல்,எனும்)இரு மகன்களின் உண்மைச்செய்திகளை நீங்கள் அவர்களுக்கு ஓதிக்காண்பியுங்கள். இருவரும் “குர்பானி” (பலி) கொடுத்தபோது அவ்விருவரில் ஒருத்தருடைய (குர்பானி)எற்றுக்கொள்ளப்பட்டது,மற்றொருவருடையது ஏற்கப்படவில்லை.” –அல்குர்ஆன் -5:27.
இவ்வசனத்திற்கு இப்ன் கதிரீன் விளக்கத்தில்,குர்பானி கொடுக்கப்பட்டது,செம்மறியாடு என்று இப்னு அப்பாஸ்(ரலி)அறிவிப்பில் இப்னு அபிஹாத்தமில் பதிவு செய்யப்பட்டதாக கூறுகிறார்கள்.
எனவே கால்நடைகளின் பயன்பாடு முதல் மனிதர் ஆதம்(அலை) அவர்களின் காலத்திலிருந்தே தொடங்கிவிட்டதை அறியலாம்.இன்னும் சொன்னால்,மனிதனைப்படைப்பதற்கு முன்பே,மனிதர்களுக்கு தேவையான எல்லா வாழ்வாதாரங்களையும் அல்லாஹ் ஏற்படுத்திவிட்டான்.
கதகதப்பூட்டும் கம்பளி உரோமம்
கால்நடைகளான ஆடு,மாடு,ஒட்டகத்தின் உரோமத்திற்கு ஆங்கிலத்தில் Wool என்று அழைக்கப்படுகிறது. தமிழில் கம்பளி என்று அழைக்கின்றோம். பொதுவாக செம்மறியாட்டின் உரோமமே மிக அதிகளவில் உற்பத்தியாகி ஆடைகள் நெய்வதற்கு பரவலாக பயன்படுகிறது. இந்த கம்பளியில் கதகதப்பு இருப்பதாக அல்லாஹ் கூறுகின்றான்.மேலும் அநேக பயன்கள் இருப்பதாகவும் அறிவிக்கின்றான்.
ஆடைகள் நெய்வதற்கு பருத்தி,பட்டு,லினன்,செயற்கை இழைகள் மற்றும் சணல் போன்றவை பயன்படுகின்றன.இந்த இழைகளில் இல்லாத சிறப்புகள் கால்நடைகளின் கம்பளிக்கு இருப்பதாக அறிவியல் ஆய்வுகள் கூறுகின்றன.
மனித இன வரலாற்றில் எவ்வளவோ அறிவியல் சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன, புதிய புதிய நவீன கண்டுபிடிப்புகள் வந்துவிட்டன. ஆனால் அல்லாஹ் தன் கரங்களைக்கொண்டு படைத்த கால்நடைகளின் (அல்குர் ஆன் -36:71) ஒரே ஒரு உரோமத்தைப் போன்ற ஒன்றை கண்டுபிடிக்க முடியவில்லை. ஏனென்றால் கம்பளி உரோமத்தின் உள்ளமைப்பு (Complex structure) மிக மிக சிக்கலான ஒன்று.
நபி(ஸல்) அவர்கள் கூறிய ஹதிஸ் இங்கு கவனிக்கத்தக்கது.
“ குர்பானி பிராணியின் உரோமத்திற்கு நன்மை கொடுக்கப்படும்” என்று நபி(ஸல்)அவர்கள் கூறினர்,அப்பொழுது “ஒவ்வொரு உரோமத்ததிற்கும் நன்மை கொடுக்கப்படுமா?”என்று கேட்டபொழுது,”ஆம்! ஒவ்வொரு உரோமத்திற்கும்.”என்று பதில் கூறினார்கள்.” அறிவிப்பவர்:ஜைது பின் அர்கம்(ரலி) ஆதாரம்: இப்னு மாஜா.
கம்பளி உரோம இழைகள் (Wool fiber) Cortical செல்களால் ஆனவை. இந்த செல்கள் Cuticle என்ற உறையில் போர்த்தப்பட்டுள்ளது. செதில் போன்ற குயுட்டிகல் ஆனது Epicuticle என்ற மற்றொரு மெல்லிய உறையால் மூடப்பட்டுள்ளது. எபிகுயுட்டிகளானது ஈரத்தை ஓட்ட விடாத தன்மை கொண்டது. ஆனால் அதேசமயம் குயுட்டிகிள் வெளியில் உள்ள ஈரப்பதத்தை உறுஞ்சும் தன்மை கொண்டது.
இப்படி உறுஞ்சப்பட்ட ஈரத்தை (Moisture) நீரை கம்பளி உரோமத்தின் மத்தியில் அனுப்பும் பொழுது கம்பளி மூலக்கூறானது (Wool molecules) நீரில் உள்ள ஹைட்ரஜனை இரசாயன மாற்றத்தின் மூலம் (Chemical reaction) பிரித்து விடுகிறது. இந்நிகழ்வின்போது Exothermic- ( “out side heating”) முறைப்படி வெப்பம்,(140KJ) கதகதப்பு உற்பத்தியாகிறது. குளிர் காலத்திலும் குளிர் பிரதேச மக்களும் கம்பளி ஆடைகள் அணிவதற்கு மூல காரணம் கம்பளி அளிக்கும் கதகதப்புதான். கால்நடைகளின் உரோமம் செய்யும் இரசாயன மாற்றத்தை அல்லாஹ் 1400 ஆண்டுகளுக்குமுன்பே சொல்லிவிட்டான்.
கம்பளி ஆடைக்குள்ள மற்றொரு சிறப்பு, கடும் வெப்பமுள்ள சஹாரா பாலைவனத்தில் வசிக்கும் நாடோடிகள் மெல்லிய கம்பளி ஆடைகளை அனிந்திருப்பர் காரணம் கடும் வெப்பத்தில் உடல் வரண்டுவிடக்கூடாது என்பதற்காக.கம்பளி வெளிவெப்பத்தை உள்ளே விடாது, உள்வெப்பத்தை வெளியே விடாது ஒரே நிலையில் வைத்திருக்கும்.தெர்மக்கோல் (Styrofoam) தக்கை போன்று செயல்படுகிறது.
கம்பளி உரோமத்தில் மெல்லிய காற்றுப்பைகள் உள்ளன. உடம்பிலுள்ள வியர்வை ஈரத்தை தன் காற்றுப்பைகளில் இழுத்துக்கொள்ளும்.
இந்தக்காற்றுப்பைகள் தனித்தனி அறைகளாக இருப்பதால் ஈரத்தை உடனடியாக கடத்தாமல் மெதுவாக ஆவியாக்கும். ஆகவே உடல் வெப்பமடைவதை தடுத்து ஒரே நிலையில் வைத்துக் கொள்ளும் (Natural insulator) தன்மையுடையது.
கம்பளி ஆடை மழையில் நனைந்தலோ அல்லது ஈரமாகிவிட்டாலோ உடம்பிற்குள் ஈரத்தை கடத்துவதில்லை. அதன் எடையில் 30% நீரில் நனைந்தாலும் கதகதப்பை தொடர்ந்தளிக்கும் தன்மைகொண்டது. (Hygroscopic insulator)
கம்பளி உரோமத்தின் மற்ற சிறப்புகள்
ஒரு உரோமம் 18-41 மைக்க்ரான் தடிமன் உளளது. மூலக்கூறு கம்பிச்சுருள் போன்று அமைந்துள்ளதால் 50% நீளும் தன்மை உடையது.உரோமம் நன்கு வளையும் (Elasticity) சுமார் 20,000 முறை முன்னும் பின்னும் வளைத்தாலும் முறியாது. ஆனால் பருத்தி நூல் இழைகள் 3000 தடவை மட்டுமே தாக்குப்பிடிக்கும், பட்டு நூல் 2000 தடவைக்குமேல் முறிந்துவிடும். கம்பளி தீப்பிடித்து எரியாது. தீயில் கரிகிக்கொண்டே செல்லும், கம்பளியை தீயில்லிருந்து எடுத்துவிட்டால் உடனே அணைந்துவிடும். காரணம், உரோமங்களிலுள்ள மெல்லிய துளைகளில் ஈரப்பதத்தை வைத்திருப்பதால் தீ அணைந்துவிடும். கம்பளி முற்றிலும் தீயில் எறிவதற்கு 38% ஆக்ஸிஜன் தேவை. ஆனால் காற்றில் இருப்பதோ 22% மட்டுமே. இந்த சிறப்புத்தன்மை காரணமாக, விமானம், கப்பல், ரயில் மற்றும் பாதுகாப்புத்துறை, தீயணைப்புத்துறைகளில் கம்பளி இருக்கைகள், விரிப்புகள் போர்வைகள், ஆடைகள் பெரிதும் பயன்படுத்தபடுகின்றன.
கம்பளி அம்ப்போடேரிக் (Amphoteric) குணமுடையது, அதாவது காரத்தன்மை,அமிலத்தன்மை உள்ள இரண்டு இரசாயன சாயங்களையும் தனது உரோமக்கால்களில் உறுஞ்சிக்கொண்டு நிரந்தர வர்ணத்தை கொடுக்கும்.ஆகவே வண்ண ஆடைகள் நெய்வதற்கு உகந்தது.
தோலில் இருந்து வெளிவரும் வியர்வையானது ஆடையில் படிந்து பாக்டீயாக்களை உற்பத்திசெய்து நாற்றத்தை வெளிவிடும். ஆனால் கம்பளியானது வியர்வை ஈரத்தை தன்னுள் இழுத்துக்கொண்டு சிறிது சிறிதாக காற்றில் ஆவியாக்கி விடுவதால் (Breathability) துர்நாற்றம் அடிப்பதில்லை. மைக்ரோ பாக்டீரியாக்கள் மற்ற செயற்க ைஇழை ஆடைகளை தாக்கும். ஆனால் கம்பளிகளில் அவை தொற்றுவதில்லை,
ஏனெனில் ஒவ்வொரு உரோமமும் மீன் செதில்கள் போல் அமைந்துள்ளதால் தொற்றாது.
சுற்றுசூழலுக்கு உகந்தது, மண்ணில் எளிதில் மக்கி உரமாகும். மற்ற ஆடைகளை விட கம்பளியானது சூரியனின் புற ஊதா (UV rays) கதிர்களை உடலுக்குள் விடாமல் தடுக்ககூடியது மின் அதிர்ச்சியை தடுக்கக்கூடிய தன்மை கம்பளிக்கு உண்டு.
அல்லாஹ் கூறுவதுபோல் “ஒரு காலம் வரையில் உங்களுக்கு பயன்படுகின்றன”.கம்பளி நீடித்து உழைக்கக்கூடியது.
கம்பளிக்கு அரபியில் صوف (Soof ) என்று பெயர். எல்லா காலத்ததிற்கும் ஏற்ற கம்பளியை போர்த்திக் கொண்டு காடு, மலை, எங்கும் அலைந்து திரிந்து மெய்ஞானத்தை? தேடியவர்களைத்தான் “சூபியாக்கள்” என்று அழைக்கப்பட்டனர்.
(கம்பளியில்) “இன்னும் அநேக பயன்களுண்டு” – அல்குர்ஆன்-16:5
என்று அல்லாஹ் கூறுகின்றான். இந்த வசனம் இறங்கிய பொழுது தெரியாத பயன்கள் இன்று நமக்கு தெரிகின்றது.
பொதுவாக கால்நடைகளிலிருந்து, இறைச்சி,பால், தோல்,கம்பளி கிடைக்கிறது.ஆனால் இன்று இதிலிருந்து ஏராளமான உப பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.
தோல் மற்றும் உரோமத்திலிருந்து கிடைக்கும் பொருள்கள்
லனோலின், உல்லன் ஆடைகள், தோல் வாத்தியம், நூல், பிரஷ், விளையாட்டு சாதனங்கள், கையுறை, பந்து, ஷூ, கார்பெட், அஸ்பால்ட் பைண்டர்,தைலம், டென்னிஸ் பந்து, தோல் செருப்பு, காரின் உள் அலங்காரம், ஓட்டும் பசை, பெயின்ட், பிளாஸ்டர் பைண்டர்.
கால்நடைகளின் கொழுப்பிலிருந்து கிடைக்கும் பொருள்கள்
ஜெலட்டின் வெடிமருந்து,பெயின்ட் சால்வேன்ட், பபில்கம், மேக்கப் சாதனம், பாலாடைக்கட்டி,தொழில்கூட எண்ணெய், ஸ்டீரிக் அமிலம், செராமிக், மருந்துப்பொருள்கள், ஷூ பாலிஷ், சோப், டயர், பராபின் மெழுகு, கோழித்தீவனம், சலவைத்தூள், கிரையான் சாக்பீஸ்,தரைவிரிப்பு பசை,பதப்படுத்தும் பொருள்கள், ரப்பர் தயாரிப்புகள், இரசாயனங்கள், பூச்சிகொல்லி மருந்துகள், மெழுகு திரிகளைக்கொல்லி, ஷேவிங் கீரீம், ஹேர் கண்டிசன் ஷாம்பு, கீரீம், லோஷன்கள்.
கால்நடைகளின் கொம்பு, எலும்பு, குளம்பு, தரும் பொருட்கள்
மருத்துவ ஊசி,ஜெலட்டின் டெசர்ட்,பியானோ கீ,பாண்டேஜ் ஸ்ட்ரிப், எலும்புக்கரி, பென்சில், ஜெலட்டின் காப்ஸ்யூல், ஓட்டும் டேப்கள், போனோகிராப், பற்பசை, சீப்பு, சட்டை பட்டன், எமரி பேப்பர்,ஐஸ் கீரீம் ,லேமினேசன், பிளாஸடிக் சர்ஜரி பொருட்கள், வால் பேப்பர், நாய் பிஸ்கட்,ஸ்டீல் பால் பேரிங், உரம், ஓட்டும் பசைகள்,உயர்ரக ஸ்டீல்,பிளைவுட்,ஷாம்பு,கிளிசரின்,போட்டோ பிலிம், நைட்ரஜன் உரங்கள், பொட்டாஷ்,பாஸ்பரஸ் உரங்கள் என்று பட்டியல் போட்டுக்கொண்டே செல்லலாம்.
“நிச்சயமாக ஆடு,மாடு,ஒட்டகம் ஆகியவகைகளில் உங்களுக்கு ஒரு படிப்பினை இருக்கிறது.அவற்றின் மடியில் இருந்து (பாலை)நாம் உங்களுக்கு புகட்டுகிறோம். அன்றி உங்களுக்கு அவைகளில் அநேக பயன்களும் இருக்கின்றன.அவைகளில் சிலவற்றை நீங்கள் புசிக்கிறீர்கள்.” –அல்குர் ஆன்-23:21
இறுதியாக,மனிதர்களைப்பற்றி அல்லாஹ் கூறுகின்றான்.
“நீங்கள் கேட்டவைகளை எல்லாம் அவன் உங்களுக்கு அளித்தான் ஆகவே அல்லாஹ்வுடைய அருட்கொடைகளை நீங்கள் கணக்கிடும் சமயத்தில் அதனை உங்களால் எண்ண முடியாது (இவ்வாறு எல்லாமிருந்தும்) நிச்சயமாக மனிதன் வரம்பு மீறுகிரவனாகவும் மிக நன்றி கெட்டவனாகவும் இருக்கிறான்.” -அல்குர்ஆன்-14:34.
Post a Comment