GuidePedia

0




 
கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் குறித்து பேசும்போதெல்லாம், போர்ட் (Port) என்ற சொல்லை அடிக்கடி பயன்படுத்துகிறோம். இது எதனைக் குறிக்கிறது? கம்ப்யூட்டருக்கு ஒரு போர்ட் கட்டாயம் தேவையா? அது இல்லாமல் கம்ப்யூட்டரால் செயல்பட முடியுமா என்று யாரும் கேள்வி கேட்பதில்லை. ஆனால் இதற்கான பதில் ஒரு பெரிய “”ஆம்”தான். நம் கம்ப்யூட்டரில் உள்ள போர்ட்கள், கம்ப்யூட்ட ருடன் பல துணை சாதனங்களை இணைக்க உதவுகின்றன. உங்கள் கம்ப்யூட்டரின் பின், முன் மற்றும் பக்க வாட்டில் பல்வேறு அமைப்புகளில் உள்ள துளைகள் தான் கம்ப்யூட்டரின் போர்ட்கள் ஆகும். இவை லேப் டாப் மற்றும் பிற கம்ப்யூட்டரிலும் உண்டு.
போர்ட்களின் வகைகள்: கம்ப்யூட்டர்களில் உள்ள போர்ட்களைப் பார்க்கையில், முதலில் நம் கவனத்தைக் கவரும் ஓர் அம்சம், அவை அனைத்தும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை என்பதுதான். அடிக்கடி நாம் பயன்படுத்தும் ஒரு போர்ட் யு.எஸ்.பி.(USB) போர்ட் தான். இது ஒரு தடிமன் குறைந்த செவ்வக வடிவமான போர்ட். இதனுள் கருப்பு அல்லது வெள்ளை வண்ணத்தில் பொருள் இருப்பதனைக் காணலாம். பொதுவாக, இப்போது வடிவமைக்கப்படும் கம்ப்யூட்டர்களில் மூன்று அல்லது நான்கு யு.எஸ்.பி. போர்ட்கள் தரப்படுகின்றன. நாமாக ஆர்டர் செய்தால், கூடுதலாகவும் யு.எஸ்.பி. போர்ட்களை அமைத்துத் தர முடியும். இதனால், நாம் எத்தனை துணை சாதனங்களையும் இதன் மூலம் கம்ப்யூட்டருடன் இணைக்க முடியும். பிரிண்டர், கீ போர்ட், மவுஸ், பிளாஷ் ட்ரைவ், மொபைல் போன், டிஜிட்டல் கேமரா என இந்த சாதனங்களின் வகைகளும், எண்ணிக்கையும் ஏராளம்.
அடுத்த வகை போர்ட் வி.ஜி.ஏ. (VGA) போர்ட். இது ஒரு D வடிவில் இருக்கும் போர்ட் ஆகும். இதில் மூன்று வரிசைகளில் 15 துளைகளைக் காணலாம். இதில் மானிட்டர் ஒன்றை கம்ப்யூட்டருடன் இணைக்கலாம். லேப்டாப் கம்ப்யூட்டருக்கு மானிட்டர் ஒன்றை இணைக்க வேண்டிய தேவை இல்லை. உபரியாகவோ அல்லது லேப் டாப் திரை கெட்டுப்போகும்போது மானிட்டரை இணைத்துப் பார்க்க வேண்டிய தருணம் ஏற்படலாம். அப்போது அதற்கான போர்ட் தேவைப் படும்.
கம்ப்யூட்டரில் இன்னும் சில வகை போர்ட்கள் உள்ளன. அவற்றுள் Fire Wire, HDMI மற்றும் Ethernet ஆகியவை அடங்கும்.
கம்ப்யூட்டருக்கான துணை சாதனம் ஒன்றை அதனுடன் இணைக்க விரும்புகையில், அப்படி ஒரு சாதனத்தை வாங்க முற்படுகையில் அதற்கான போர்ட் வகை அதில் உள்ளதா என முதலில் தெரிந்து உறுதி கொள்ள வேண்டும். இல்லையேல் வாங்கிய பின்னர் வருந்தி பயனில்லை. பின்னர், இரு வகை போர்ட்களை இணைக்கும் இணைப்பியைத் தேட வேண்டியதிருக்கும். அனைத்து வகை போர்ட்களையும் இணைக்கும் கனெக்டர்கள் அவ்வளவாகக் கிடைப்பதில்லை.
போர்ட்கள் ஏன் தேவைப்படுகின்றன?
அனைத்து வகை கம்ப்யூட்டர்களுக்கும் போர்ட்கள் கட்டாயமாகத் தேவைப்படுகின்றன. பல துணை சாதனங்கள், அவற்றை ஏதேனும் ஒரு போர்ட் மூலம் கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்டால், அவை செயல்பட மாட்டா. இக்காலத்தில், வயர் கொண்டு இணைக்கப்படாமலேயே பல சாதனங்களை இணைத்துச் செயல்படுத்த முடியும். வை-பி, புளுடூத் ஆகியன இதற்குக் கை கொடுக்கின்றன. இருப்பினும், சிலவற்றை வயர் வழி இணைத்துத் தான் செயல்படுத்த முடியும். சில சாதனங்களை சில வேலைகளுக்கு மட்டும் வயர் கொண்டு இணைக்க வேண்டும். அதே சாதனத்தை வேறு வேலைகளுக்கு வயர் கொண்டு இணைக்காமலும் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, ஐ-பாட் அல்லது , ஸ்மார்ட் போன் சாதனத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இவற்றுக்கும் கம்ப்யூட்டருக்கும் இடையே புளுடூத் மூலம் பைல்களை மாற்றிக் கொள்ளலாம். ஆனால் சார்ஜ் செய்திட வேண்டும் எனில், இவற்றை வயர் கொண்டு இணைத்துத் தான் செய்திட முடியும்.
இப்போது கம்ப்யூட்டர்களில் வயர்லெஸ் நெட்வொர்க்கிங் கார்ட் எனப்படுபவை இணைக்கப்பட்டு கிடைக்கின்றன. இவற்றின் மூலம் ஒரு கம்ப்யூட்டர் நெட்வொர்க் அல்லது இன்டர்நெட் உடன் கம்ப்யூட்டரை இணைத்து செயல்படுத்த முடியும். அப்படியானால், இந்த வேலைக்கென ஈதர்நெட் போர்ட் ஏன் தரப்படுகிறது என நீங்கள் கேட்கலாம். இதனை குறிப்பிட்ட ஈதர்நெட் கேபிள் வழியாக மட்டுமே பயன்படுத்த முடியும். உங்கள் வயர்லெஸ் நெட்வொர்க் கார்ட் செயல்படத் தவறும் பட்சத்தில் நீங்கள் இந்த போர்ட்டினைப் பயன்படுத்தலாம்.
ஏதேனும் ஒரு நாளில், திடீரென உங்கள் கம்ப்யூட்டர் உங்களுக்கு இன்டர்நெட் இணைப்பினைத் தராமல் மறுக்கலாம். அப்போது எந்த சாதனம் இந்த இணைப்பினைத் தர மறுக்கிறது என்று அறிய நீங்கள் விரும்பலாம். அப்போது வயர்லெஸ் இணைப்பா அல்லது வயர் மூலம் இணைப்பா — எது பிரச்னை தருகிறது என அறிந்து அதற்கான தீர்வினைப் பெற முடியும்.
கம்ப்யூட்டரில் போர்ட்கள் என்பது நம் கம்ப்யூட்டர் பணிக்கு அடிப்படையாய் அமைவனவாகும். எனவே கம்ப்யூட்டர் ஒன்று வாங்கும் முன், அல்லது பல நிறுவன கம்ப்யூட்டர்களில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் முன், அவற்றில் என்ன என்ன வகை போர்ட்கள் தரப்பட்டுள்ளன என்பதனை அறிந்து, நாம் விரும்பும் போர்ட் வகைகள் உள்ளனவா என்பதனையும் கண்டறிந்து வாங்க வேண்டும்.

Post a Comment

 
Top