GuidePedia

0

Image result for குறை

அவன் சரியில்லை;
இவன் சரியில்லை;
இவுங்க சரியில்லை;
அவர் சரியில்லை; என்று ஏராளமான தள்ளுபடிகளைச் செய்து நட்பு வட்டத்தையும் உறவு வட்டத்தையும் சுருக்கிக் கொண்டு, தங்கள் உலகத்தை மிகச் சிறியதாக ஆக்கிக் கொள்கிறவர்களைப் பார்க்கிறோம்.
இவர்களை நினைத்தால் எனக்குச் சிரிப்பாகவே வரும். குறைகள் இல்லாதவர் யார்? சகிக்க முடியாத குறைகள் உள்ளவரா? எல்லையோடு நட்பு வைத்துக் கொள்ளுங்கள். தாங்க முடியாத குறைகளா? விலகி நில்லுங்கள்; மாறாக, வெறுத்து ஒதுக்கி வெட்டிக் கொள்ளாதீர்கள்.
கடையில் தள்ளுபடி விலையில் ஒரு பொருளைத் தருகிறபோது, “இதில் சின்னக் குறை இருக்கு சார். அதனால்தான் சார் தள்ளுபடி” என்கிறார் கடைக்காரர். “அதனாலென்ன சார்! பரவாயில்லை!” என்று ஏற்றுக் கொள்கிறோம். எவரும், “என்ன இதைப் போய் வாங்கியிருக்கீங்க?” என்று குறையாய்ச் சொன்னால், “இதெல்லாம் ஒரு குறையா? போங்க சார்?” என்று சேதப்பட்ட ஒரு பொருளுக்கு வக்காலத்து வாங்குகிறோம்.
வாழ்க்கையிலும் இதே பார்வை உண்டா அனைவருக்கும்?
குறைகள் தெரிந்தோ, தெரியாமலோ வாழ்க்கைத் துணையைத் தேடிக் கொள்கிறோம். ஆனால் இவற்றை ஜீரணிக்காமல் அடிக்கடி அதைக் குத்திக் காட்டியும் நினைத்து நினைத்து நெஞ்சை ரணப்படுத்தியும் அவதிப்படுகிறோம். இது ஏன்?
பிள்ளைகள் பிறக்கின்றன. அவர்களுக்கும் குணக் குறைபாடுகளோ, பண்பு நலனில் சேதங்களோ, உடற் குறைகளோ இருக்கின்றன என்றாலும் ஜீரணக்கிறோமா? இல்லை.
காலமெல்லாம் செரிமானம் செய்து கொள்ளாமல் வயிற்று வலியாய் உணர்கிறோம்.
நண்பர்களை உருவாக்கிக் கொள்கிறோம். இவர்கள் ஒன்றும் வானத்துத் தேவர்கள் அல்லர். இவர்களோடு ஏற்படும் அனுபவங்களில் மனம் நொந்து கொள்வதில் பயன் உண்டா? அவர் அப்படித்தான் நன்கு தெரிந்ததுதானே? என்று விட்டுவிடுகிறோமா? இல்லையே!
தள்ளுபடியுடன் ஒரு பொருளை வாங்கி அதன் குறைபாடுகளை ஜீரணித்தோம் அல்லவா? உறவில், நட்பில் ஒரே ஒரு வித்தியாசம் என்ன தெரியுமா, வாங்கிய பிறகே தெரிய வரும் தள்ளுபடிகள் இவர்கள்.
இந்தத் தாமதத் தள்ளுபடிகளையும் ஜீரணிப்போம், குறைகளுடன் இவர்களை ஏற்போம்!

Post a Comment

 
Top