GuidePedia

0
பெருந்தன்மையாளர்
தனது மார்க்கக் கட்டளைகளை ஏற்று நடக்கும் உண்மை முஸ்லிம், மனிதர்களுடன் பெருந்தன்மையுடன் நடந்துகொள்வார். எனெனில் இம்மை மறுமையின் நலன்களைக் கொண்டு வருவதில் பெருந்தன்மைக்கு நிகரான பண்பு வேறில்லை. பெருந்தன்மையான, மென்மையான நடத்தை மனிதமனங்களை மிக அழமாக உடுருவிச் செல்லும் என்பது நபி (ஸல்) அவர்களின் போதனையாகும். இப்பண்புகளின் மூலம் அல்லாஹ்வின் திருப்தியையும், மன்னிப்பையும் பெற்றுக் கொள்ளலாம்.
    அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “விற்கும் போதும், வாங்கும்போதும், கடன் வசூலிக்கும்போதும் பெருந்தன்மையுடன் நடந்துகொள்ளும் மனிதருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக!” (ஸஹீஹுல் புகாரி)
    அபூ மஸ்வூத் அல் அன்சாரி (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “உங்களுக்கு முன்னிருந்தவர்களில் ஒரு மனிதர் விசாரணை செய்யப்பட்டார். அவரிடம் எந்த நன்மையும் இல்லை. எனினும் அவர் மனிதர்களிடம் பழகும் ஒரு செல்வந்தராக இருந்தார். வறியவர் களிடமிருந்து வரவேண்டிய கடன்களை ரத்து செய்து விடுமாறு தனது அடிமைகளுக்கு உத்தரவிடுபவராக இருந்தார். அல்லாஹ்ு தஆலா அவ்வாறு மன்னிப்பதற்கு அவரைவிட நானே மிகத் தகுதியானவன். அவரை விட்டுவிடுங்கள் என்று கூறினான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)
    இந்தப் பண்பு மனிதனின் நற்செயல்களை நிறுத்துப் பார்க்கும் தராசில் எவ்வளவு கனமானது! மறுமையின் மிகச் சிரமமான நேரத்தில் இந்த நற்பண்பு மனிதனுக்கு எவ்வளவு அவசியமானது!
    மலர்ந்த முகமுடையவர்
மென்மையாக, தாராளத்தன்மையுடன் நடந்து கொள்ளும் முஸ்லிம் மக்களிடையே மலர்ந்த முகத்துடன் பழகவேண்டும் என இஸ்லாம் வலியுறுத்துகிறது.
    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நற்செயல்களில் எதையும் அற்பமாகக் கருதாதே. அது உமது சகோதரரை மலர்ந்த முகத்துடன் நீர் சந்திப்பதாயினும் சரியே.” (ஸஹீஹ் முஸ்லிம்)
    பிரபல ஸஹாபியான ஜரீர் இப்னு அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: “நான் இஸ்லாமை தழுவியதிலிருந்து நபி (ஸல்) அவர்களை பார்ப்பதற்கு என்னை அவர்கள் தடுத்ததில்லை. மேலும் அவர்கள் புன்னகை செய்யாமல் என்னைப் பார்த்ததே இல்லை.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
    எந்தச் சமூகம் பெருந்தன்மையையும் நேசத்தையும், மலர்ந்த முகத்தையும் வலியுறுத்துகிறதோ அதுதான் உயர்ந்த, உறுதியான, பரஸ்பர அன்பு கொண்ட மனித சமுதாயமாகத் திகழும். அதில் மனிதர் கெªரவிக்கப்படுவார். உயர் பண்புகள் மதிக்கப்படும். மனிதநேயம் உறுதி அடையும். அதுதான் உறுதியான இஸ்லாமிய சமூக அமைப்பாகும். அல்லாஹ்வினால் அங்கீகரிக்கப்பட்ட இந்தச் சமூகத்திற்கும், வன்னெஞ்சமுள்ள உலகாதாயத்தையே நோக்கமாகக் கொண்ட சமூகத்திற்குமிடையே மிகப் பெரிய இடைவெளியை நாம் காண்கிறோம். அச்சமூகத்தில் வாழ்பவர் அண்டை வீட்டாரையோ உறவினரையோ இலட்சியம் செய்வதில்லை. நெருங்கிய நண்பரையும் புன்னகையுடன் வரவேற்காமல் எல்லா நிலைகளிலும், எல்லாக் காலங்களிலும் பொருளைத் தேடி ஒடுவதே வாழ்வின் இலட்சியம் என்ற கண்ணோட்டத்தைக் கொண்டிருக்கிறார்.
    நகைச்சுவையாளர்
பற்றுள்ள முஸ்லிம் சக மனிதர்களிடம் நேச உணர்வுடனும், மென்மையான நகைச்சுவையுடனும் நடந்துகொள்ள வேண்டும். அப்பண்புகள் கடுமையோ வன்மையோ இல்லாமல் பிறரை பாதிக்காத வகையில் முகமலர்ச்சியுடன் அமைய வேண்டும். அந்த நகைச்சுவை உண்மையின் வட்டத்தைத் தாண்டி விடாமல் இஸ்லாம் வகுத்த உண்மையின் எல்லைக்குள் அமைந்திருக்க வேண்டும்.
    நபி (ஸல்) அவர்களும் தோழர்களும் நகைச்சுவை உணர்வு கொண்டிருந்தார்கள். திருத்தூதரிடம் அந்தப் பண்பைக் கண்ட நபித்தோழர்கள் ஆச்சரியத்துடன், “இறைத்தூதரே! நீங்கள் எங்களுடன் நகைச்சுவையாக நடந்து கொள்கிறீர்களே!” என வினவினர். அப்போது  நபி (ஸல்) அவர்கள், “நான் உண்மையைத் தவிர வெறெதனையும் கூற மாட்டேன்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் நகைச்சுவை இயல்பைப் பெற்றிருந்தார்கள். ஆஆனால் விளையாட்டாகக் கூட அதில் பொய்யைக் கலந்துவிடாமல் உண்மையையே கூறி வந்தார்கள். நபி (ஸல்) அவர்களின் அடிச்சுவட்டில் நபித்தோழர்களும் அந்த இயல்பைக் கொண்டிருந்தார்கள்.
    இது குறித்து ஹதீஸ் நூல்களிலும், நபி (ஸல்) அவர்களின் வரலாற்று நூல்களிலும் பல்வேறு நிகழ்வுகள் குறிப்பிடப்படுகின்றன. நபி (ஸல்) அவர்கள் தமது தோழரின் மகனான “அபூ உமைர்’ என்ற சிறுவரிடம் விளையாட்டாக நடந்து கொண்டு பரிகாசம் செய்திருக்கிறார்கள். அந்தச் சிறுவர் குருவி ஒன்றை வளர்த்து வந்தார். அது ஒரு நாள் இறந்து விட்டது. நபி (ஸல்) அவர்கள் அச்சிறுவரைக் கவலை தோய்ந்த முகத்துடன் கண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அவரிடம், “அபூ உமைரே! உன்னைக் கவலையானவராகக் காண்கிறேனே?” என்றார்கள். அங்கிருந்தோர், “அவர் விளையாடிக் கொண்டிருந்த குருவி இறந்து விட்டது அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினார்கள். அதிலிருந்து அவரைக் காணும் போதெல்லாம் நகைச்சுவையாக, “அபூ உமைரே! உமது நுஹைர் (குட்டிக் குருவி) என்னவாயிற்று?” என்று கேட்பார்கள். (ஹ்யாத்துஸ் ஸஹ்ாபா)
    ஒரு மனிதர் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “நான் பயணிப்பதற்கு ஒரு ஒட்டகம் தாருங்கள்” எனக் கேட்டுக்கொண்டார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள் கேலியாக, “நான் உமக்கு ஒரு பெண் ஒட்டகையின் குட்டியைத் தருகிறேன்” என்று கூறினார்கள். அம்மனிதர், “அல்லாஹ்வின் தூதரே! குட்டியை வைத்து நான் என்ன செய்ய முடியும்?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “நீர் கேட்கும் ஒட்டகமும் ஒரு பெண் ஒட்டகத்தின் குட்டிதானே…” என்று கூறினார்கள். (அல் அதபுல் முஓப்ரத்)
    அனஸ் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: ஜாஹிர் என்ற கிராமவாசி ஒருவர் நபி (ஸல்) அவர்களுக்கு தனது கிராமத்திலிருந்து அன்பளிப்புகளை எடுத்து வருவார். அவர் திரும்பும்போது நபி (ஸல்) அவர்களும் அவருக்கென பிரயாண தேவைகளைத் தயார் செய்து தருவார்கள். நபி (ஸல்) அவர்கள், ஜாஹிர் நமக்கு கிராமத்துத் தோழர்; நாம் அவருக்கு பட்டணத்துத் தோழர்கள் என்றார்கள். அவரை மிகவும் நேசிப்பார்கள். அவர் அம்மை நோயால் முகம் பாதிக்கப்பட்டிருந்தார். அவர் தனது பொருள்களை விற்றுக்கொண்டிருந்த பொழுது நபி (ஸல்) அவர்கள் பின்னால் வந்து அவரைக் கட்டிப்பிடித்துக் கொண்டார்கள். அவரால் யாரென்று திரும்பிப்பார்க்க முடியவில்லை. அவர், “யாரது? என்னை விடுங்கள்” என்று கூறிவிட்டு, திரும்பிப் பார்த்தபொழுது நபி (ஸல்) அவர்கள் என அறிந்து கொண்டார். உடனே நபி (ஸல்) அவர்களிடமிருந்து விலகாமல் அவர்களது நெஞ்சுடன் தனது முதுகைச் சேர்த்துக் கொண்டார். நபி (ஸல்) அவர்கள், “இந்த அடிமையை வாங்கிக் கொள்பவர் யார்?” என்று கூறத் தொடங்கினார்கள். அவர், “அல்லாஹ்வின் தூதரே! விற்பதாக இருந்தால் என்னை மிகவும் விலைமதிப்பு குறைந்தவனாகக் கருதுகிறேன்” என்று கூறினார். அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள், “என்றாலும் நீர் அல்லாஹ்விடம் குறைந்த மதிப்புடையவர் அல்லர்” என்றோ, “எனினும் அல்லாஹ்விடம் நீர் மிகுந்த மதிப்புடையவர்” என்றோ கூறினார்கள். (முஸ்னத் அஹ்மத்)
    ஒரு வயோதிகப் பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! நான் சுவனம் செல்ல அல்லாஹ்விடம் துஆ செய்யுங்கள்” என்றார். நபி (ஸல்) அவர்கள் கேலியாக, “இன்னாரின் தாயே! கிழவிகள் சுவனம் புகமாட்டார்கள்” என்றார்கள். அம்மூதாட்டி அழுதவளாக திரும்பிச் சென்றாள். நபி (ஸல்) அவர்கள், “அவள் கிழவியாக இருக்கும் நிலையில் சுவனம் செல்லமாட்டாள் என்பதை அவளிடம் தெரிவித்து விடுங்கள்!” என்று கூறினார்கள். பின்பு பின்வரும் இறைவசனத்தை ஒதிக் காட்டினார்கள்: “நிச்சயமாக நாம் அவர்களைப் புதிதாகவே படைத்திருக்கின்றோம். இன்னும் நாம் அவர்களைக் கன்னியர்களாகவே ஆக்கியிருக்கின்றோம்’ (அல்குர்அன் 56:35,36). (ஸன்னனுத் திர்மிதி)
    நபி (ஸல்) அவர்கள் எளிமையாகவும், நகைச்சுவைப் பண்புடையவர்களாகவும் இருந்திருக்கிறார்கள் என்பதற்கு எராளமான சான்றுகள் காணப்படுகின்றன. அதில் ஒன்றை இமாம் அஹ்மத் (ரஹ்) அறிவிக்கிறார்கள்.
    அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: ஒரு பயணத்தில் நபி (ஸல்) அவர்களுடன் சென்றிருந்தேன். அப்போது நான் உடல் பெருக்காத மெலிந்த பெண்ணாக இருந்தேன். நபி (ஸல்) அவர்கள் தோழர்களிடம் “முன்னே சென்றுவிடுங்கள்” என்று கூறிவிட்டு, பின்பு என்னிடம் “வா! நாம் ஒட்டப் பந்தயம் வைத்துக் கொள்வோம்” என்றார்கள். அவ்வாறு நாங்கள் ஒடினோம். நபி (ஸல்) அவர்களை நான் முந்திவிட்டேன். அவர்கள் அமைதியாக இருந்துவிட்டார்கள். இந்த நிகழ்ச்சியை நான் மறந்துவிட்டேன். பின்பு நான் உடல் பருத்துவிட்டேன். நபி (ஸல்) அவர்களுடன் இன்னுமொரு பயணத்தில் நானும் சென்றிருந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் தோழர்களிடம் “முன்னே சென்றுவிடுங்கள்” என்று கூறினார்கள். பிறகு என்னிடம் “வா நாம் ஒடுவோம்” என்றார்கள். நாங்கள் ஒடினோம். ஆனால் அவர்கள் என்னை முந்திவிட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் சிரித்தவர்களாக, “அதற்கு இது (சமமாகி விட்டது)” என்று கூறினார்கள். (முஸ்னத் அஹ்மத்)
    இதனால்தான் நபித்தோழர்கள் இவ்வாறு கேலி செய்வதை தவறாகக் கருதவில்லை. ஏனெனில் அவர்களது வழிகாட்டியான நபி (ஸல்) அவர்கள் சில வேளைகளில் கேலி செய்திருக்கிறார்கள். இது முந்திய இஸ்லாமிய சமூகத்தின் உயர்ந்த பண்பையும், சிறந்த நகைச்சுவை உணர்வையும் எடுத்துக்காட்டுகிறது, இன்னும் அவர்களிடத்தில் கடுகடுத்த, இறுக்கமான தன்மை காணப்படவில்லை என்பதையும் தெளிவுபடுத்துகிறது.
    “நபித்தோழர்கள் ஒருவருக்கொருவர் தர்பூசணிப் பழத்தைத் தூக்கி எறிந்து விளையாடினார்கள். ஆனால் எதார்த்தம் என்று வந்துவிட்டால் அவர்கள் வீரர்களாகி விடுவார்கள். (அல் அதபுல் முஃப்ரத்)
    இஸ்லாம் அனுமதிக்கும் இந்த நகைச்சுவை உணர்வு நேர்மையானதும் நடுநிலையானதுமாகும். இதைச் செய்பவர் சத்தியத்திலிருந்து பிறழமாட்டார். அது அவரது வீரத்தின் ஜுவாலையை அணைத்து விடாது. அது மனங்களை விசாலப்படுத்தி இதயங்களை உற்சாகப் படுத்துவதாக இருக்கும்.
    நபி (ஸல்) அவர்களுக்கு சிரிப்பை எற்படுத்திய ஒரு நிகழ்ச்சியும் வரலாற்றில் நடந்துள்ளது. உம்மு ஸலமா (ரழி) அவர்கள் கூறினார்கள்: அபூபக்கர் (ரழி) அவர்கள் புஸ்ரா நகரத்திற்கு வியாபார நிமித்தமாகச் சென்றார்கள். பத்ருப் போரில் பங்கேற்ற “நுஅய்மான்’ மற்றும் “ஸுவைபித் இப்னு ஹர்மலா’ (ரழி) அவர்களையும் உடன் அழைத்துச் சென்றார்கள். அதில் ஸுவைபித் (ரழி) பிரயாண உணவுக்கு பொறுப்பாளராக இருந்தார். அவரிடம் நுஅய்மான் (ரழி) “உணவு கொடுங்கள்” என்றார். அவர் “அபூபக்கர் (ரழி) வரட்டும்” என்று மறுத்துவிட்டார். நுஅய்மான் (ரழி) நகைச்சுவையாளராகவும், கிண்டல் செய்பவராகவும் இருந்தார். அவர் ஒட்டகங்களை இழுத்து வந்து கொண்டிருந்த சில மனிதர்களிடம் சென்று, “என்னிடம் சுறுசுறுப்பான அரபு அடிமை ஒருவர் இருக்கிறார். அவரை என்னிடமிருந்து வாங்கிக் கொள்கிறீர்களா?” என்றார். அவர்கள் ஒப்புக் கொண்டார்கள். நுஅய்மான் (ரழி) கூறினார் “அந்த அடிமை நாவன்மை உடையவர். அவர் தன்னை சுதந்திரமானவன் எனக் கூறலாம். நீங்கள் அதை நம்பி அவரை வாங்க மறுப்பதாக இருந்தால் இப்போதே என்னை விட்டுவிடுங்கள். அவர் விஷயத்தில் எனக்கு இடையூறு செய்யாதீர்கள்” என்றார். அம்மனிதர்கள் இல்லை, அவரை வாங்கிக் கொள்கிறோம் என்றார்கள். ஸுவைபித் (ரழி) அவர்களை அம்மனிதர்கள் 10 பெண் ஒட்டைகைகளைக் கொடுத்து வாங்கிக் கொண்டார்கள்.
    நுஅய்மான் (ரழி) 10 ஒட்டகைகளையும் அம்மனிதர்களையும் அழைத்து வந்து “இதோ இவர்தான் பிடித்துக் கொள்ளுங்கள்” என்றார். ஸுவைபித் (ரழி) “இவர் பொய்யர், நான் சுதந்திரமனிதன்; அடிமையில்லை” என்றார். வந்தவர்கள் “உம்மைப் பற்றிய எல்லா விஷயத்தையும் இவர் (நுஅய்மான்) கூறிவிட்டார்” என்று கூறி அவரது கழுத்தில் கயிற்றைப் பிணைத்து அழைத்துச் சென்று விட்டார்கள். அப்போது அபூபக்கர் ஸித்தீக் (ரழி) வந்தார்கள். அவர்களிடம் நடந்த விஷயத்தைக் கூறப்பட்டது. அவர்கள் தமது தோழருடன் சென்று அவர்களது ஒட்டகைகளைக் கொடுத்துவிட்டு அவரை மீட்டு வந்தார்கள். பிறகு இதை நபி (ஸல்) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. சுற்றிலும் தோழர்கள் அமர்ந்திருந்த நிலையில் தோழர்களும் நபி (ஸல்) அவர்களும் ஒரு வருடமாக இதைப் பேசி சிரித்துக் கொண்டார்கள். (முஸ்னத் அஹ்மத்)
    ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். மஸ்ஜிதுக்குள் நுழைந்து அதன் முற்றத்தில் தனது ஒட்டகையை அமரச் செய்தார். சில நபித்தோழர்கள் நுஅய்மான் (ரழி) அவர்களிடம் “நாம் இறைச்சி சாப்பிட்டு வெகுநாட்களாகி விட்டது. மிகவும் ஆவலாக இருக்கிறது. நீர் இதை அறுத்தால் நாம் சாப்பிடலாம், இறுதியில் நபி (ஸல்) அவர்கள் அதற்கான விலையை பொறுப்பேற்றுக் கொள்வார்கள்” என்று கூறினார்கள். அப்போது நுஅய்மான் (ரழி) அதை அறுத்துவிட்டார்.
    பின்பு அந்தக் கிராமவாசி தனது ஒட்டகையைப் பார்த்துவிட்டு “முஹ்ம்மதே! அறுத்து விட்டார்களே!” என்று கூச்சலிட்டார். நபி (ஸல்) அவர்கள் வெளியே வந்து “இதைச் செய்தது யார்?” என்று கேட்டார்கள். நபித்தோழர்கள் “நுஅய்மான்” என்று கூறினார்கள். அவர் எங்கே இருக்கிறார் என நபி (ஸல்) அவர்கள் தேடிச் சென்றபோது அவர் ளுபாஆ பின்த் ஜுபைர் (ரழி) அவர்களின் வீட்டில் ஒரு குழியினுள் ஒளிந்துக் கொண்டார். அவர் பேரீச்ச மட்டைகளாலும் கீற்றுகளாலும் தன்னை மறைத்துக் கொண்டிருந்தார்.
    ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் சப்தமாக “அல்லாஹ்வின் தூதரே! நான் நுஅய்மானைப் பார்க்கவில்லை” என்று கூறியவராக நுஅய்மானின் பக்கம் சைக்கினை செய்தார். நபி (ஸல்) அவர்கள் அவரை வெளியேறி வரச் செய்தார்கள். அவர்மீது கிடந்த கட்டைகள் முகத்தில் அழுத்தியதால் அவரது முகம் நிறம்மாறி இருந்தது. நபி (ஸல்) அவர்கள் அவரிடம் “உம்மை இவ்வாறு செய்யத் தூண்டியவர் யார்?” என்று கேட்டார்கள். நுஅய்மான் (ரழி) நபி (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! என்னைப்பற்றி உங்களிடம் கூறினார்களே அவர்கள்தான் என்னைத் தூண்டினார்கள்” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் அவரது முகத்தை தடவிக் கொடுத்து சிரித்தார்கள். பின்பு அந்த ஒட்டகைக்கான விலையைக் கொடுத்தனுப்பினார்கள். (ஹயாத்துஸ் ஸஹாபா)
    இவைகளே இஸ்லாம் தனது உறுப்பினர்களிடம் விரும்பும் கேலியும், நகைச்சுவையாகும். இதன்மூலம் மனமகிழ்ச்சி ஏற்படுகிறது. இத்தன்மை உடையவர் நேசிக்கும் பண்பைப் பெறுகிறார். மனம் சஞ்சலமடைவதிலிருந்து விடுதலை பெறுகிறார். அல்லாஹ்வின் பாதையில் ஏகத்துவ அழைப்புப்பணி செய்வோருக்கு இது மிக அவசியமான பண்பாகும்.
Next
Newer Post
Previous
This is the last post.

Post a Comment

 
Top