GuidePedia

0


அழைப்புப் பணியில் ஈடுபடுபவர்களின் அசல் நோக்கம் மறுமையாக அல்லாஹ்வைத் திருப்தி படுத்துவதாக இருந்தால் மக்கள் சத்தியத்தை மறுப்பதைக் கொண்டு விசனப்படாமல் அவர்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் நாம் செயல்பட வேண்டும் என்ற தப்பான முடிவுக்கு வராமல் சத்தியத்தை உள்ளது உள்ளபடி சொல்லிக் கொண்டே இருப்பார்கள். மக்கள் அனைவரும் அவர்களை ஒதுக்கி தள்ளினாலும் அதனால் கவலைப்பட மாட்டார்கள். தன்னைப் பின்பற்றும் ஒரு நபர் கூட இல்லாத நிலையிலும் தனது பணியை செவ்வனே செய்த பல நபிமார்கள் அல்லாஹ்வின் திருப்தியுடன் சுவர்க்கம் நுழைவார்கள் என்ற நபிமொழியின் கருத்தை மனதில் கொண்டு உறுதியுடன் சத்தியத்தில் நிலைத்திருப்பார்கள்.


ஆனால் அதற்கு மாறாக மறுமையைக் குறிக்கொளாகக் கொள்ளாமல் இவ்வுலகில் பதவிகளையோ, புகழையோ, பொன்னையோ, பொருளையோ குறிக்கோளாகக் கொண்டு மார்க்கப் பிரசாரத்தில் ஈடுபடுகிறவர்கள் தங்கள் குறிக்கோள்கள் நிறைவேற மக்களின் திருப்தியைப் பெறவே குறியாக இருப்பார்கள் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது. இது மனித இயல்பு. இதனை விட்டும் அல்லாஹ்வால் பாதுகாக்கப்பட்டவர்களைத் தவிர வேறு யாரும் தப்ப முடியாது. இது பற்றி நபி (ஸல்) அவர்களையே அல்லாஹ் இவ்வாறு எச்சரிக்கிறான்.


(நபியே) தீயவை அதிகமாக இருப்பது உம்மை ஆச்சரியப்படுத்திய போதிலும் “தீயதும், நல்லதும் சமமாகா எனவே அறிவாளிகளே! அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள். அதனால் நீங்கள் வெற்றி யடைவீர்கள்” என்று கூறுவீராக (அல்குர்ஆன் 5:100)


மேலும் மனிதர்களின் சில விருப்பங்களை ஏற்றுக் கொள்ளும்போது அவர்கள் நம்மை தங்கள் உற்றநன்பர்களாக ஆக்கிக் கொள்வார்கள். மக்களின் ஆதரவு அமோகமாக கிடைக்கும். அதே சமயம் அதன் பின் விளைவு மகா பயங்கரமானது என்பதை அழைப்புப் பணியாளர்கள் உணர வேண்டும். அது குறித்து அல்லாஹ் நபி (ஸல்) அவர்களையே எச்சரித்துள்ள வசனங்கள் வருமாறு :


(நபியே!) இன்னும் நாம் வஹீ மூலம் அறிவித்தோமே அதைவிட்டும், அதல்லாததை நம்மீது நீர் இட்டுக்கட்டிக் கூறும்படி உம்மைத் திருப்பி விடவே அவர்கள் முனைந்தார்கள்; (அவ்வாறு நீர் செய்திருந்தால்)உம்மை தம் உற்ற நண்பராகவும் அப்போது எடுத்துக் கொண்டிருப்பார்கள்.


மேலும், நாம் உம்மை (உண்மையான பாதையில்) உறுதிபடுத்தி வைத்திருக்க வில்லையெனில் நீர் கொஞ்சம் அவர்கள் பக்கம் சாய்ந்து போயிருத்தல்கூடும்.(அவ்வாறு நீர் சாய்ந்திருந்தால்) நீர் இவ்வாழ்நாளில் இரு மடங்கு (வேதனையும்) நுகருமாறு நாம் செய்திருப்போம்; பின்பு, நமக்கு எதிராக உமக்கு உதவியாளர் எவரையும் நீர் காணமாட்டீர். (அல்குர்ஆன் 17:73-75)


குர்ஆனின் இந்த எச்சரிக்கைகளை எல்லாம் கூர்ந்து நிதானித்து செயல்படும் சத்தியப் பிரசாரகன் எந்த நிலையிலும் மக்கள் கோபப்படுகிறார்கள், தனது சொல்லை செவிமடுக்க மறுக்கிறார்கள் என்ற காரணத்திற்காக உள்ளதைத் உள்ளபடி சொல்லுவதிலிருந்தும் பின் வாங்க முடியாது. மக்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் சிலதை விட்டு சிலதை சொல்லும் ஷைத்தானின் துர்போதனைக்கு ஆளாக மாட்டார்கள். இவர்கள் புத்தியில் சிறிய விஷயங்களாகப் படுபவற்றையெல்லாம் சொல்லாமல் விட்டு, இவர்கள் புத்தியில் பெரிய விஷயமாகப் படுபவற்றை மட்டும் சொல்லும் குற்றச் செயலுக்கு ஆளாக மாட்டார்கள். அதாவது மார்க்கப் பிரசாரத்தில் தங்கள் மனித புத்தியை நுழைக்க முற்படமாட்டார்கள். விளைவுகள் தங்களின் சொந்த முயற்சிகளிலும், தங்களின் அனுமானங்களிலும் தங்கி இருக்கின்றன என தப்புக் கணக்குப் போடமாட்டார்கள்.


விளைவைப் பற்றி அக்கறைப்படாமல் அல்லாஹ்வின் உத்திரவுகளை எடுத்து வைப்பதே எமது கடமை என்பதைச் செவ்வனே உணர்ந்து செயல்படுவார்கள். “இன்னும் எங்கள் கடமை (இறைவனின் தூதுச் செய்தியை) விளக்கமாக எடுத்துச் சொல்வதைத் தவிர வேறில்லை” (அல்குர்ஆன் 36:17)


இந்த அல்லாஹ்வின் தெளிவான கட்டளையை சிரமேற்கொண்டு குர்ஆனிலும் ஹதீஸிலும் இருப்பதை மக்கள் முன் எடுத்து வைப்பதைவிட வேறு அதிகாரம் தங்களுக்கு இல்லை என்பதை உணர்ந்து செயல்படுவார்கள். தங்கள் மனித அறிவைக் கொண்டும் அனுமானங்களைக் கொண்டும் மார்க்க பிரசாரத்தைத் திறம்பட செயல்படுத்த முடியும் என்ற அல்லாஹ்வை மறந்த எண்ணத்தை ஒரு போதும் மேற்கொள்ள மாட்டார்கள். அல்லாஹ் யாரை நேர்வழியில் செலுத்துகிறானோ அவர்களால் மட்டுமே இவை அனைத்தும் சாத்தியமாகும்.


இது விஷயத்தில் யார் அல்லாஹ்வின் அருளைப் பெறவில்லையோ அவர்கள் மட்டுமே அல்லாஹ்வை மறந்து தங்கள் சொந்த புத்தியைக் கொண்டும், முயற்சிகளைக் கொண்டும், மக்களின் ஆதரவைக் கொண்டும் சாதித்துவிட முடியும் என்ற நச்சுக் கருத்துக்கு ஆளாவார்கள். தங்கள் சொந்த புத்தியில் உதித்ததைச் செயல்படுத்துவது கொண்டு மக்களில் ஒரு கூட்டம் அவர்களை நம்பி, அவர்கள் பின்னால் வர ஆரம்பித்து விட்டால் அவர்கள் தாங்கள் பெரிதாகச் சாதித்து விட்டதாக மனப்பால் குடிப்பார்கள். நேர்வழியில் இருக்கும் வரை கூட்டம் குறைவாக இருக்கும் நிலை மாறி வழிதவறி விட்டால் பெருங்கூட்டம் பின்னால் வர ஆரம்பித்துவிடும் என்ற உண்மையை அல்லாஹ் தன் திருமறையில் இவ்வாறு குறிப்பிடுகிறான்.


பூமியில் உள்ளவர்களில் பெரும்பாலோரை நீர் பின்பற்றுவிரானால் அவர்கள் உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டு வழிகெடுத்து விடுவார்கள். (ஆதாரமற்ற) வெறும் கற்பனையிலேயே மூழ்கிக்கிடக்கிறார்கள். (6:116)


மக்கள் நம் கருத்துக்களை ஆர்வமாகக் கேட்டு ஏற்றுக் கொள்கிறார்கள், கூட்டம் கூட்டமாக வருகிறார்கள் என்பதெல்லாம் நாம் நேர்வழியில் நடக்கிறோம் என்பதற்கு உரைகல் அல்ல. இன்று வழிகேட்டில் உச்ச கட்டத்தில் இருப்பவர்களின் பின்னால்தான் பெருங்கூட்டங்கள் இருக்கின்றன. நாம் நேர்வழியில் இருக்கிறோம் என்பதற்கு சரியான அளவுகோல் குர்ஆனும் ஹதீஸும் ஆகும். அவை எடுத்துச் சொல்லுபவை சிறிய விஷயங்களாக இருந்தாலும், பெரிய விஷயங்களாக இருந்தாலும், சிறிது பெரிது என கொள்ளாமல் மக்கள் முன் எடுத்து வைப்பதே பிரசாரகனின் கடைமையாகும். நமது கடமைகளைச் செவ்வனே செய்யும் உண்மைப் பிரசாரகர்களாக அல்லாஹ் நம்மை ஏற்று அருள் புரிவானாக.


Post a Comment

 
Top